பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற பொருட்களில் உள்ள ரசாயனங்கள், உணவுப் பொருட்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலப்பது அறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, "எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி" என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள உணவுப் பேக்கேஜிங் கூட்டமைப்பின் அறக்கட்டளையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவோடு தொடர்புடைய 100 வகையான ரசாயனங்கள், மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ரசாயனங்களில் சில, பொதுவாக பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் பூசப்படும் பிஎஃப்ஏ நுண்ணறி பொருட்கள் (PFAS), மற்றும் பிளாஸ்டிக் குடுவைகளில் இருக்கும் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A) போன்றவை, உணவோடு கலந்து உடலில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல், நாம் உணவை உட்கொள்வது வாயிலாக, 3,601 விதமான வேறு ரசாயனங்கள் மனித உடலில் கலப்பது கண்டறியப்பட்டது. இவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பிஸ்ஃபெனால் ஏ (BPA), மனித உடலில் கலப்பதால், ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. இதன் காரணமாக, பல நாடுகளில் குழந்தைகளின் பால் புட்டியில் BPA பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை உண்டாக்கக்கூடிய ஃபேலேட்ஸ் (Phthalates) ரசாயனமும் உணவின் மூலம் உடலில் சேர்கிறது.இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க, கடைகளில் வாங்கிய உணவுப் பொருட்களை உடனே பொட்டலங்களில் இருந்து எடுத்து, வீட்டில் பாதுகாப்பான பாத்திரங்களில் வைத்துக் கொள்வது மிக முக்கியம். குறிப்பாக, பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் போன்றவற்றில் கொண்டு வரும் உணவுகளை சூடேற்றி சமைத்து சாப்பிட கூடாது.