செய்த தவறுக்கு, தண்டனை வழங்குவதில் இறைவன் சரியான நீதிபதி. இதற்கு, மஹாபாரத்திலேயே உதாரணம் இருக்கிறது.குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தது. அதனால், அவனிடமே, தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். ‘என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீதானே காரணம். அவர் செய்த தவறு என்ன?’ என கேட்டான்.கிருஷ்ணன் சிரித்து விட்டு, ‘செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்றான். ‘அப்படி என்ன என் தந்தை பாவம் செய்துவிட்டார்’ கேட்டான் அஸ்வத்தாமன். கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான்.'உன் தந்தை, அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால், ஏழையாக இருந்தார். அவரை, கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக, பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான், அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது.கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் சகல, வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். ‘எனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள்’ என, உன் தந்தையிடம் கேட்டான்.அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர, துரோணர் மறுத்துவிட்டான். ஆனால், ஏகலைவன், உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து, குருவாக வழிபட்டு, வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின், ஒரு சந்தர்ப்பத்தில், ஏகலைவனின் வில் வித்தை திறமை, அர்ஜூனனுக்கு தெரிந்தது. அவன், துரோணரிடம் கோபம் அடைந்தான். ஏகலைவன் தானே கற்றுக் கொண்டதை அர்ஜுனனிடம் தெரிவித்து, அவனை உன் தந்தை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால், என்ன செய்தார். வில்வித்தைக்கு மிகவும் தேவையான, கட்டை விரலை, குரு காணிக்கையாக, ஏகலைவனிடம், உன் தந்தை கேட்டார். அவனும், மகிழ்ச்சியாக கொடுத்து, குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார்.அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தில் உன் தந்தை, சுயநலமாக நடந்து கொண்டு, ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும், அவனது எதிர்காலம் வீணானதுக்கு, உன் தந்தை தான் காரணம். இந்த பாவம் தான், உன் தந்தையை, போர்களத்தில், மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது. துரோணர், தியானத்தில் இருந்த போது, அவரை திரவுபதியின் சகோதரரன் அநியாயமாக கொலை செய்தான். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், பாணடவர்கள், தங்களின் வாரிசுகளை இழந்தனர் என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன். உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன், ‘நீ நினைத்திருந்தால், இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா ’என, கேட்டான் அஸ்வத்தாமன்.‘ஏன் இல்லை . ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின் தான் எனக்கு மரணம் ஏற்படும்’ என்றான் கிருஷ்ணன். உண்மைதான், யாதவ வம்சம் அழிந்து, காட்டில் தனிமையில்* தியானத்தில் அமர்ந்திருந்த போது, மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் ,கிருஷ்ணின் உயிர் பிரிந்தது. செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும்.