வானத்தில் ஜொலித்த சந்திரயான்-3
ஆஸ்திரேலியாவின் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.
வானியல் ஆர்வலர் டிலான் ஓடோனல் தனது டுவீட்டில், சந்திரயான்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திரயான்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2 வது ஏவுதளத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.