ரயில் பெட்டி இடையே சிக்கிய ரயில்வே ஊழியர்
பீகார் மாநிலத்தில் லக்னோ - பரானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் பிரித்து கொண்டிருந்தார். அப்போது முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி வந்த இன்ஜின் அவர் மீது மோதியது. இதனால் ரயில்வே பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 15204 ) புறப்பட்டது. இந்த ரயில் இன்று பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பராணி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கு சமஸ்தீர்பூர் மாவட்டம் தால்சிங்சாராய் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருண் குமார் ராவத் (வயது 35) என்பவர் பணியில் இருந்தார். லக்னோ - பராணி ரயிலில் இருந்து கப்ளிங் பிரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். ரயிலில் பார்சல் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் வகையில் ‛கப்ளிங்கை' அவர் தயார் செய்தார்.
இந்த சமயத்தில் இன்ஜினை இயக்கிய டிரைவர் முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி இயக்கினார். அப்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே பணி செய்த அருண் குமார் ராவத் மீது இன்ஜின் மோதியது. இதனால் அவர் ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கினார். அவரது உடல் நசுங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கத்தினர். இந்த சத்தம் கேட்டதும், ரயில் இன்ஜினை விட்டுவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றி அறிந்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண் குமார் ராவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.