கவிதை
Poems by - TamilPoonga
கைமாறு

நம்பிக்கை வைத்தே 

நடந்து செல்கிறோம் 
ஆனால் பாதை 
வேறு எங்கோ 
திரும்பி விடுகிறது 



அன்பு பயணத்தில் 
அரவம் 
தீண்டி விடுகிறது 



பச்சோந்திகளுக்கு 
பழக்கப்பட்டவை அவை  
அப்பாவிகள் நாம்தான் 
அனாதையாகி விடுகிறோம் 



பொய் தோரணங்களில் 
புதைந்து போவதால் 
உண்மை முகங்களை கண்டு 
வியந்து நிக்கிறோம் 



பணங்கள் 
குணங்களை 
மாற்றி விடுகிறது 



வசதிகள் 
வாய்மையை 
ஒழித்து விடுகிறது 



பகட்டும் பெருமையும் 
பாசத்தை அழித்து 
விடுகிறது 



போலி சேவல்களின் 
கூவலில் 
பொழுதுகள் விடியவில்லை 
திரோகங்கள் மட்டுமே 
விழித்து நிற்கிறது 



வசனம் பேசியவர்கள் 
வசதி வந்ததும் 
விஷமேறி விடுகிறது 



புதிய முகவரிகள் 
காணும்போது 
பழையவை 
காணாமல் போய் விடுகிறது 



நேர்மையாய் 
நடந்து பார் 
ஏமாளி என்பார்கள் 



உண்மையாய் 
இருந்து பார் 
உதவாக்கரை என்பார்கள் 



மனம் வைத்து 
பழகினாலும் 
குணம் காட்டி விடுவார்கள்



உயிராய் நேசித்தாலும்
கொடிய 
கைமாறு செய்வார்கள் 
துரோகம் செய்பவரை மட்டும் 
தூக்கி தோளில் சுமப்பார்கள் 


சிந்திப்போம்....

குறுகிய ஆயுளில்

குவியும் ஏமாற்றங்கள்

கண்டு கலங்காதே

கவலை கொள்ளாதே

விடிந்தால் பயணி

முடிந்தால் மெளனி

போட்டி

நீயா... நானா...

நிலையாய்  போட்டியில்

வெங்காயம் தக்காளி

விலைதனின் உச்சத்தில்...

என்று இதன் முற்றுப்புள்ளி

எதிர்பார்ப்பில் மக்கள்...!

இன்றைய நிதர்சனம்

உச்சம் தொட்ட விலை

உட்கார்ந்திருந்தது தக்காளி...

உடன் ஏறிய நிலை

உரிக்காமலேயே கண்ணில் நீர்துளி

உதிர வைத்தது சின்னவெங்காயம்...

சிறு துண்டு இஞ்சியும்

சில்லறைக்கு இனி இல்லை...

உருண்டது அங்குமிங்குமாய்

உற்சாகமாய் முட்டைகோசு

இரண்டு மாதமாய்

இறங்கவில்லை அதன் மவுசு...

துட்டில் மிக தூக்கலாய்

துடிப்பாய் தட்டில் மிளகாய்...

பரவலாய் விரிந்திருக்கும்

பசுமையாய் காய்கறி அவை..

வதங்கியது வியாபாரி முகம்

விற்பனை களை கட்டவில்லை...!

இரட்டை குழந்தைகள்


வலிகளை வாங்குவதற்காகவே 
நேசங்களை செதுக்குகிறோம் 



ஆனால் நமக்கு 
கிடைப்பதோ
சிலைகள் அல்ல 
சித்திரவதைகள் 



பூவை 
வருடி விடுகிறோம் 
நோகாமல் இருப்பதற்காக 
ஆனால் அதுவோ 
தீ வைத்து விடுகிறது 
நம்மை இல்லாமல் 
செய்வதற்காக 



கவலை படுவதும் 
கலங்கி வாழ்வதும் 
நம்மோடு 
ஒட்டி பிறந்த 
இரட்டை குழந்தைகள்


சுவாசம்

கல்லறை வாசங்களை

பார்த்து விட்டேன்

பழகி விட்டேன்



போர் முனையில்
பொதி செய்த
குண்டுகளாய்
மனித குணங்கள்
மாறக்கண்டு
வெடித்து சிதறியது உள்ளம்



நம்பிக்கை
தும்பிக்கை இழந்த
யானையாய்
விழுந்து கிடக்கிறது
பள்ளத்தில்



வானம் விழுந்ததாய்
விரைந்து சென்றேன்
அது
நீரில் நிழல் என்றதும்
திரும்பி விட்டேன்



அச்சு அடித்த காகிதத்தில்
அடங்கி விட்டது
உலகம்
உண்மை சுமந்த படி
சுற்றி திரிந்தால்
தினம் விழுவது செருப்படி



போதும் என்றாகி விட்டது
வாழ்க்கை
தேடல் பிழைப்பதால்
கரைந்து போன
உப்பு கல்லாய்
முயற்சிகள்
முடங்கி விடுகிறது



அடங்கி விட்டது
ஆசைகளும் ஆர்வங்களும்
ஏணிகளில்
ஏரவும் பிடிக்கவில்லை
தோணிகளில்
கடக்கவும்
பிடிக்கவில்லை



கல்லறை வாசங்களை
மட்டும்
சுவாசித்து கொண்டிருக்கிறது
சுவாசம்
வறுமையின் பிரதிபலிப்பு

விழும் அச்சமில்லை

விரல்நுனி தாங்கிடும்...

வறுமையின் உச்சம்

வாழ்வின் ஆதாரம்...!


நம்பிக்கை

கூன் விழுந்த பாட்டி

கூட வரும் நம்பிக்கையூட்டி...

ஒன்றாய் கைகோர்த்தபடி

ஒற்றை கைத்தடி...!

ஏகாந்தம்


தேன்
எவ்வளவு தித்தித்தாலும்
தேவைகள்
தீர திகட்டத்தான்
செய்யும்..



நியாயங்கள்
சில இடங்களில்
ஒரு தலை பட்சமாகி
அநியாயங்களுக்கு
துணை போய் விடுகின்றது..



நான்
என்ற அகங்காரம்
தலை
விரித்தாடினால் சேதாரம்
கூடாரமடிக்கும்..



அறிவாளி
என்ற முலாம்
பூசிக் கொண்டாலே
பகுத்தறிவு பாடை
ஏறிவிடும்..



எல்லாம்
தெரியுமென்று தம்பட்டம்
அடிப்பவனுக்கும்
தன் சாவு என்று  
எனதெரியாத பக்கம் ஒன்று
இருக்கத் தான் செய்கின்றது.



எவ்வளவு
தான் வளைந்து கொடுத்தாலும்
சில நேரங்களில்
மனதை உடைத்து விடுகின்றது
நேசித்த உறவு..



நான் 
எனது என்ற வாசனைகள் 
அழிவது தான் வாழ்க்கையில்
உண்மையான ஏகாந்தம்…


முகங்களும் முகவரியும்


முகங்கள் வேறு
முகவரிகள் வேறு



வருடும் பொழுதில்
எல்லாம்
ரோஜாவின் முல்லாய்
காயப்பட்டு போவதே
வாடிக்கை



மனசாட்சி என்பவர்கள் கூட
மிதிப்பதில்
சுகம் காணுகிறார்கள்



பாஷை
பரிதாபமாக இருந்தாலும்
பாசங்கள் எல்லாம்
பாசாங்காய்
போய் விடுகிறது



உண்மை
முகங்களும் முகவரியும்
புதைந்து விட்ட இடம்
தெரியாமல்
போய் விட்டது


மஹா சிவராத்திரி

அரியானை அம்பலக் கூத்தனை

அருமறையின் அகத்தானை...

ஆர்வத்தினை அகம் வைத்து

அனுதினமும் போற்றும் பொழுது...

அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!



விஸ்வநாதர் ஆட்சியாய்

விசாலாட்சி அன்னையாய்...

அன்னத்தின் பெருமை

அன்னபூரணி வீற்றிடலாய்...

காவல் தெய்வமாய்

காலபைரவர்  துணை...

சிறப்பாய் கோவிலெங்கும்

சிவலிங்கம் அருளாசி...

பூமியில் படர்ந்திருக்கும்

புண்ணியஸ்தலம் காசி

சிறகு தேவையில்லை


வீர வசனங்களில்
மேடை அதிரும்
வீராப்பு பேசி
வீம்புடன்
மீசை திருக்கி
இறங்கியதும்
எப்படி என் பேச்சு
என்பதும்



தேர்தல் காலம்
முடிந்தால்
திருவிழா
நிறைவுற்றதாய்
நீ யாரோ நான் யாரோ



சாக்கடை அரசியலை
பூக்கடையாக்க
வந்தேன் என்பதும்
சாக்கடைக்குள் புரண்டு
சகதியுடன்
எழுவதும்
காக்க வந்த அரசியலாம்



அடுக்கடுக்காய்
வார்த்தை ஜாலங்களால்
வர்ணம் பூச
தேவையில்லை



வென்றால் மகிழ்ச்சி
சேவைக்கு வாய்ப்பு
கிடைத்தற்காய்
தோற்றல்
அதைவிட மகிழ்ச்சி
பொறுப்பிலிருந்து
தப்பித்ததற்காய்



பறக்க தேவையில்லை
சிறக்க இருந்தால்
போதும்
சிறகு தேவையில்லை



13-24