நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்துள்ளது
கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது .
சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.
மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.