காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி கொட்டும் மழைக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி கொட்டும் மழைக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டமானது இன்று (20-02-2022) பகல் 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக ஆரம்பமாகி ஏ-09 வீதி வழியாக டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்றடைந்தது.
தமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீப்பு போராட்டமானது இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1825 நாட்களை தாண்டி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் போது இலங்கை அரசானது தங்களுக்கான நீதியை பெற்றுத்தரும் என்பதில் எந்தவிதமான நம்பிக்கைகளும் இல்லை சர்வதேச சமூகமே எங்களுக்கான நீதியைப் பெற்று தர வேண்டும் என்றும் குறித்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.போராட்டத்தின் இறுதியில் ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப் பட்டுள்ளது.குறித்த மகஜர் வேலன் சுவாமிகளிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கட்சிகளின்பிரதிநிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.