ரத்தன் டாடா பற்றிய சில தகவல்
1937-ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. தனது கல்லூரி மேல்படிப்பை ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். எனினும் சில ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார்.
1962 இல் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1970களில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட துணை நிறுவனமான நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சாதித்தார்.
பின்னர் அடுத்தடுத்து பல பொறுப்புகளில் வகித்த அவர் 1991ம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் டாடா இண்டஸ்ட்ரீஸ் பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அவர் 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த காலத்தில், குழுமத்தின் வருவாய் கடுமையாக அதிகரித்து, 2011-12ல் $100 பில்லியனை எட்டியது. பின்னர் அவர் அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை தற்காலிக தலைவராக ஆனார். இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவின் சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் வளர்ச்சியில் ரத்தன் டாடா முக்கிய பங்கு உண்டு. ரத்தன் டாடா இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வந்தார். ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு இப்போது 3800 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதி டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வருகிறது.
ரத்தன் டாடாவிடம் பல சொத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மும்பையின் கொலாபாவில் உள்ள ஆடம்பரமான பங்களா. சுமார் 13,350 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடி வீடு உள்ளது. ரத்தன் டாடாவின் இந்த ஆடம்பரமான வீட்டில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஊடக அறை மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன.
அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். அதன்பிறகு 2008 ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்டவற்றை ஃபோர்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. 2009ம் ஆண்டில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகவும் விலை குறைந்த காராக இந்த காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து வந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும் வரை டாடா குழுமத்தை வழிநடத்தினார்.
வயது மூப்பு காரணமாக ரத்தன் டாடா (86) அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் 09.10.24 புதன் இரவு இயற்கை எய்தினார்.