Feed Item
Added a news 

வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை நினைவு கூர தடை கோரி இன்று (17) மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கும், கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக ஒன்று கூடுவதற்கும் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் வவுனியாவின் குடியிருப்பு குளத்தடி, கலாசார மண்டபம், தோணிக்கல் பகுதியில் உள்ள கடை, பொங்கு தமிழ் நினைவுத்தூபி, வவுனியா நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நினைவு கூருவதற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா, செயலாளர் கோ.ராஜ்குமார், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஜெனிற்றா, செல்வநாயகம் அரவிந்தன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராகவே குறித்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த செல்வநாயகம் அரவிந்தன் தான் பயங்கரவாத அமைப்பின் தலைவரை நினைவு கூறவில்லை எனத் தெரிவித்தும், குறித்த கட்டளையில் தனக்கு சம்மந்தமில்லாத விடயம் இருப்பதாகவும் கூறி வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை பொலிஸாரிடம் மீள கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • 428