Feed Item
Added a news 

வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்து வந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன. இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 011 4354647 மற்றும் 011 4354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705 / 5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

  • 258