ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ். ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார். சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன. அத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது. பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டியபடி பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்.ஒரு முதியவர், அது என்னுடையது என்றார். பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு, ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்....ஆனாலும் பரிசோதகர், "உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?" எனக் கேட்டார்."அதில் கிருஷ்ணர் படம் இருக்கும்" என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே"."ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார் !வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது !அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர். முதியவர் தொடந்து, "நான் படித்துக் கொண்டிருந்தபோது, என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக் கொடுத்தார். ..!அப்பா அவ்வப்போது தரும் சில்லறைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன். வீட்டில் தேடிப் பிடித்து, என் அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டுபிடித்து அதில் வைத்தேன். நான் வாலிபனானேன். பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர். ஆஹா! அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை எனக்கே மிகவும் பிடித்தது...!அம்மா அப்பா படத்தை எடுத்துவிட்டு என் படத்தை பர்ஸில் வைத்து, அடிக்கடி பார்த்துக் கொள்வேன்...!சில வருடங்களில் திருமணமாயிற்று. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன். பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில்,என் அன்பு மனைவி. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இதெல்லாம் சில காலம் தான்.எங்கள் அன்பு மயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான். பர்ஸில் மறுபடியும் மாற்றம். மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான். பலமுறை படத்தைப் பார்ப்பதும்..என் மகன் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்,எனக்கு ஒரே பெருமை தான். ..!வருடங்கள் ஓடின, மனைவி காலமானாள்...!என் மகனுக்குத் தன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை...!என்னை எப்படி கவனிப்பது? என்னைத் தனிமை வாட்டியது...!கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய் தவித்தேன்...!அப்போது தான் இந்தப் படத்தை, ஒரு கடையில் பார்த்தேன். அன்பே உருவான கிருஷ்ணரின் கண்கள் என் நெஞ்சை வருடின...!அவனது உதட்டின் முறுவல், என் உள்ளத்தில் நேசத்தையும்,பாசத்தையும் நிறைத்தது. புல்லாங்குழலிருந்து தன் கையை எடுத்து, என் கரம் பற்ற நீட்டினான் கிருஷ்ணன். என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன. உடனே கிருஷ்ணனின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து,நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்...!என் கவலையும் பறந்தது.. தனிமையும் மறைந்தது...என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே.. முதியவர் நிறுத்தினார்...!ஆனால், வண்டியில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும், கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார்.பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார். ..! இவ்வளவு தான் மனித வாழ்க்கை. இதற்குள் இத்தனை போட்டியும், பொறாமையும்,மானஅவமானங்களும்,ஏமாற்றமும்,தோல்வியும், ஏழ்மையும், வாட்டும் தனிமையும்..ஆனால் இறைவனை உள்ளத்தில் வைத்து பூஜித்தால், என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நம்முடனேயே இருப்பான். அனைத்தும் அவன் செயல், அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் என்றிருந்தால்..நமக்கு எது நன்மையோ அதையே இறைவன் கொடுப்பான். நடப்பது நன்மையாகவே இருக்கும்