இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு நாள் பாகிஸ்தான் பயணத்தின் இறுதி நாளில் சர்வதேச ஊடகத்திடம் பேசிய டேவிட் லாம்மி கூறுகையில், “நீடித்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்வதற்கும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அனைத்து தரப்பினரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமையை நிறைவேற்றிட நாங்கள் வலியுறுத்துவோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பிரிட்டன் தொடர்ந்து போராடும். பயங்கரவாதம் அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் ஒரு பெரும் களங்கம். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நீண்ட வரலாற்றினைக் கொண்ட அண்டை நாடுகள். ஆனால் இந்தக் கடந்த காலத்தினால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத அண்டை நாடுகள். இனி இவர்களுக்குள் மோதல் ஏற்படக் கூடாது என்பதையும், போர்நிறுத்தம் நீடிப்பதையும் உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்." என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
- 174