Feed Item
Added article 

தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை நிலா' .

மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆகாய கங்கை’ தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அந்த நட்பு காரணமாக மோகன் வாய்ப்பு தர, மனோபாலா அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வியை அடைந்தது.

பாரதிராஜாவிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக இருந்து மிகுந்த அனுபவம் பெற்றவரான மனோபாலா, தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் மனச்சோர்விற்கு ஆளானார். ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்னும் அளவிற்கு அவரது சோர்வு அமைந்தது.

இந்த நிலையில் கலைமணியின் மூலம் ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், 'மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும்’ என்று இதர தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

சோர்வின் உச்சிக்கே சென்ற மனோபாலாவை, கண்ணதாசன் எழுதிய ‘கால மகள் கண் திறப்பாள் சின்னையா’... என்கிற திரையிசைப்பாடல்தான் ஆற்றுப்படுத்தியது. திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார் மனோபாலா. அந்த பிரார்த்தனை வீண் போகவில்லை.

மீண்டும் அழைத்த கலைமணி, “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர்.

வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ‘இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்’ என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘பிள்ளை நிலா’.

இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.

  • 264