Feed Item
Added article 

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் நல்ல ஒரு திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்று வருகிறது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் திகில் நிறைந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.

அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.

ஒரு நொடி படத்தை இயக்கிய பி.மணிவர்மன் இயக்கும் இந்த படத்தில், ஒரு நொடி படத்தின் நாயகன் தமன் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழு மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

தமன் குமார் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் மால்வி மல்ஹொத்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மைத்ரேயா, ரக்ஷா செரின் இணைந்து நடிக்கின்றனர். அருண் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர், சிவம், பேபி சஃபா, நக்கலைட்ஸ் நிவேதிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜி.ரத்திஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கும் இந்த படத்திற்கு சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் புரொடக்ஷன் டிசைனராக எஸ்.ஜெ. ராம் பணியாற்றுகிறார். மிராகில் மைக்கேல் இப்படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதுகிறார்.

"ஒரு நொடி" படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் இதில் பணியாற்றுவது இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்படத்தின் தலைப்பு அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

  • 272