Feed Item
Added article 

70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில் இவரின் கால்ஷூட்டுக்காக பல நடிகர்கள் காத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளம் என பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர் இவர்தான்,

பல நூறு படங்களில் தனியாக காமெடி ட்ராக் செய்து வந்த கவுண்டமணி 90களில் ஹீரோக்களோடு சேர்ந்து படம் முழுக்க வரும் கதாபாத்திரங்களில் நடித்தார். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என பலருடனும் இணைந்து இவர் செய்த காமெடியை சினிமா ரசிகர்கள் அப்படி ரசித்தார்கள்.

அவர்களோடு மட்டுமில்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரோடும் பல படங்களில் கவுண்டமணி நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். செந்திலுடன் இணைந்து கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள்தான் பல திரைப்படங்களை ஓட வைத்தது. கரகாட்டக்காரன் படத்திற்கு முக்கிய காரணம் கவுண்டமணி – செந்திலின் காமெடி காட்சிகள்தான்.

கவுண்டமணியை சினிமாவில் தூக்கிவிட்டவர் பாக்கியராஜ் என்பது பலருக்கும் தெரியாது. இருவரும் ஒரே ஊர் காரார்கள். பாக்கியராஜ் சென்னைக்குவந்து நடிகராக வேண்டும், இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தபோது கவுண்டமணி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்த கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியோடு வரும் காட்சிகளில் நடிக்க வைத்தவர் பாக்கியராஜ்தான். அதேபோல், அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணிக்கு படம் முழுக்க வரும் வேடத்தையும் வாங்கி கொடுத்தார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் ‘படத்தின் டைட்டிலில் கவுண்டமணியின் பெயரை போட வேண்டும் என நினைத்தேன். அவரை மணி-யாக மட்டுமே எனக்கு தெரியும். ‘அவர் முழுபேர் என்னப்பா?’ என கேட்டபோது ‘கவுண்டமணி’ என சொன்னார்கள். நானும் அப்படியே எழுதி கொடுத்துவிட்டேன்.

அதன்பின்னர்தான் அவரின் பெயர் ‘கவுண்ட்டர் மணி’ என சொன்னார்கள். நாடகங்களில் நடிக்கும்போது இல்லாத வசனத்தை கூட கவுண்ட்டராக கொடுத்து அசத்திவிடுவாராம். அதனால் அந்த பெயர் என சொன்னார்கள். ஆனால், அதற்குள் படமே வெளியாகி அவரின் பெயர் ‘கவுண்டமணி’ என வந்துவிட்டது. அதன்பின் அதுவே அவரின் பெயராகவும் மாறிவிட்டது’ என பாக்கியராஜ் கூறினார்.

  • 616