ஆறுமுக நாவலர்

  • More
Info
Name:
ஆறுமுக நாவலர்
Category:
Gender:
Birth Details
Date of Birth:
Place of Birth:
யாழ்ப்பாணம் - நல்லூர்

சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார்.தன்னுடைய 9ஆம் வயதில் தந்தையை இழந்தார். குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர். 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். 

சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார்.

உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம்.

ஆறுமுக நாவலர் 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்தார்.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது ‘முதலாம் சைவ_வினாவிடை’ எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.

தனது வாழ்வை முழுமையாக இந்து சமயத்தின் விழிப்புணர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் அர்ப்பணித்தார். தான் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்தார். இந்துக்கள் ஆகமங்கள், சாஸ்த்திரங்கள், வேதங்கள் பற்றிய அறியாமையில் இருப்பதை உணர்ந்தார். அதற்கென  சமஸ்கிருத மொழியை கற்றார். ஆங்கிலத்தில் புலமை பெற்றதைப்போல சமஸ்கிருதத்திலும் புலமைமிக்கவர்  ஆனார். ஒருவிஷயம் மிக முக்கியமானது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாவலர்  வாழ்ந்தார். ஆகவே திராவிட இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் சமஸ்கிருத முரண்பாடுகள் ஆறுமுக  நாவலர் காலத்தில் இல்லை. தமிழ் பழமையானதா சமஸ்கிருதம் பழமையானதா என்ற கேலியான விவாதம்  அப்போது இல்லை.

பாடசாலைகளில் கல்விக்காக கிருஸ்துவர்கள் கட்டணம் வசூலித்தனர். 1855ல் நாவலரால் கோப்பாய் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இலவசமாக கல்வியளித்தது. மக்களிடம் பணம் சேர்த்து இலவச கல்வியளித்தார். இந்து சமூகத்தவர் இலவசமாக கல்வியளிக்கும் அதிகமான பாடசாலைகளை உருவாக்க  அறைகூவல் விடுத்தார். அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் இந்து பாடசாலை தொடங்கப்பட்டது. ஆறுமுக நாவலரின்  கல்விக்கான பங்களிப்பு அலாதியானது. ஒரு ஆங்கில கட்டுரையாளர் 19ம் நூற்றாண்டில் வடக்கு கிழக்கில்  150 இந்து பாடசாலைகள் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில், அதாவது டிசம்பர் மாதம் 5ஆம் தேதி 1879 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

வீடியோவாக பார்க்க.....

Reviews
Login or Join to comment.