யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.000
யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேரும்,சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.இதேவேளை தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது00
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் ஒளிப்படத்தை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், ஒளிப்படத்தைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் லஞ்சமும் பணமும் கோரியுள்ளனர். இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்துவரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும். கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.000
உக்ரைனுக்கு எதிராகச் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது உக்ரைனில் போர் நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.இதற்குப் பதிலளிக்கும் வகையில் யுக்ரைனின் டினிப்ரோ மீது ரஷ்ய புதிய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருந்தது.இந்தநிலையிலும் மேலும் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.அதேநேரம், உலக நாடுகளின் தலைவர்கள் இதற்குக் கடுமையான பதிலை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலென்ஸ்கி கோரியுள்ளார்.00
"வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப் புரிந்துகொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும்.என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.கூட்டத்துக்குத் தலைமையேற்று ஆரம்ப உரையாற்றிய ஆளுநர்,"விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் தெரிவு செய்யும் மாணவர்கள் சிலர், தமது பிரதேச பாடசாலைகளில் அந்தக் கற்கை நெறியை படிப்பிப்பதற்குரிய ஆசிரியர்கள் இல்லாமல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து படிக்கின்றனர். இவ்வாறு படிக்கும் மாணவர்களில் சிலர், கல்வியை ஒழுங்காகத் தொடராது தவறான வழியில் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்தால், அதைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.பாடசாலையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ எந்தவொரு கட்டணமும் அறவிடக் கூடாது. அரசின் சுற்றறிக்கையும் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கட்டண அறவீடுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சின் செயலர் கவனித்துக்கொள்ள வேண்டும்.பாடசாலைகளுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், அவற்றில் பல இடங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது ஊழல், மோசடிக்கு வழிவகுக்கின்றது. இதைக் கண்காணிப்பதற்கு இறுக்கமான பொறிமுறை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.ஆசிரியர்கள் பலர் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றால் அவர்களை அதிகாரிகள் சந்திப்பதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறு செயற்படக்கூடாது. அவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே, ஆசிரியர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும்போது திறமையான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வடக்கு மாகாணம் 2030 ஆம் ஆண்டு கல்வியில் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துப் பயணிக்க வேண்டும். அதை நோக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேறிச் செல்ல வேண்டும்.கடந்த காலங்களைப் போன்று கல்வித்துறையில் இனி அரசியல் தலையீடுகள் இருக்காது என ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார். எனவே, அதிகாரிகள் துணிந்து பணியாற்ற முடியும். கடந்த காலங்களில் அதிகாரிகள் பழிவாங்கபட்ட சம்பவங்களும் இனி நடக்காது. எனவே, மக்கள் நம்பும் வகையில் அரச அதிகாரிகளின் சேவைகள் இருக்க வேண்டும்." - என்றார்.இந்நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் குறிப்பிடும்போது,"வடக்கு மாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமை இருக்கின்றது. தேசிய ரீதியில் கூட 17 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமைதான் உள்ளது. இங்கு பாட ரீதியாகவே ஆசிரியப் பற்றாக்குறை இருக்கின்றது.ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்திலிருந்தாலும், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 8ஆம் இடத்தில்தான் வடக்கு மாகாணம் உள்ளது. இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.இதற்கு ஆசிரியர்களின் கற்பித்தலை கண்காணிப்பதற்கான பொறிமுறை வலுவாக இல்லை என்பதும் ஒரு காரணம். அதைக் கண்காணிப்பதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய பணியை ஆற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு வடக்கு மாகாணத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. எனவே, அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சிரேஷ்ட ஆசிரியர்களை, ஆசிரிய வளவாளர்களை நியமிப்பதற்கு ஆளுநரின் அனுமதி வேண்டும்." என வலியுறுத்தினார் இதற்கு ஆளுநர் உடனடியாக அதற்கான அனுமதியை வழங்கினார்."வெளிமாவட்டங்களில் 7 ஆண்டுகளில் பணியாற்றிய பின்னர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பும் ஆசிரியர்கள் பலர், தமது வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலையே வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். இந்த மனநிலை வளர்ந்து செல்வதாகவும், எதிர்காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்." - என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் 4 ஆயிரத்து 500 தொடக்கம் 6 ஆசிரியர்கள் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கி நின்று கற்பிப்பதற்கு வசதிகள் உள்ளன. ஆனாலும், இவர்கள் இப்படிச் செல்வதால், பாடசாலை முடிந்தவுடன் அங்கிருந்து புறப்படுகின்றனர். மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது. இவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.வடக்கு மாகாணத்தின் சில பாடசாலை அதிபர்கள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குச் செல்லும் மாணவர்களின் தபால் அடையாள அட்டையில் மோசடி செய்து, வயது கூடியவர்களை குறைந்த வயதுடையர்களின் போட்டிக்கு அனுப்பும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன." - என்றார்.இதன்போது ஆளுநர், வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒழுக்கம்தான் முக்கியம். அவ்வாறான அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.அதேபோல் வடக்கு மாகாண கலாசாரப் பிரிவால், பிரதேச செயலக ரீதியான கலாசார நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா நிதியை இரண்டரை இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும், மாவட்ட நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் நிதியை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஆளுநர் அனுமதி வழங்கினார்.இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.000
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:-"13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் தேசிய மக்கள் சக்திக்கு கிட்டியுள்ளது.அதேபோல வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும்கூட பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர்.புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி கொண்டுவர வேண்டும். அதற்குரிய ஆதரவை நாம் வழங்குவோம்.ஒரு வருட காலப்பகுதிக்குள் இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சர்வகட்சி பொறிமுறை ஊடாக இதற்கான பணியை முன்னெடுத்தால் நல்லது." - என்றார்.000
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது.இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி, முன்னிலைப்படுத்துவது, விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தும் ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.முதல் கட்டமாக காசோலை வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன. உலகில் எந்த மூலையிலிருந்தும் இந் நீதிமன்றதில் வழக்குகளைப் பதிவு செய்யலாம்.குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் தங்களின் பிணை மனுக்களையும் ஒன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளை குறைப்பது மற்றும் சட்ட ரீதியான தீர்வுகளை விரைவுப்படுத்துவது ஆகியவைதான் இந்த ஒன்னலைன் நீதிமன்றத்தின் நோக்கம்.இந் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வழக்கு விசாரணை நிலவரங்களை உடனே தெரிவிக்கும்.இந் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுமே டிஜிட்டல் முறையில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.கடதாசி ஆவணங்களுக்கு இங்கு இடமில்லை. வழக்குகள் நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.000
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேறினர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.அந்நிலையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த 2002 ஆம் ஆண்டு கால பகுதியில் ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.பின்னர் 2005 ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து மக்கள் ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதிமுதல் விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.பின்னர் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.இவ்வாறான நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், , பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையிலையே கடந்த திங்கட்கிழமைமுதல் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திற்கு தினமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.இருந்த போதிலும், ஆலயத்திற்கு செல்லும் மக்கள் கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும், அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.000
மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார்.ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.வடகொரியாவின் படையினர் மற்றும் ஈரானிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரின் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மொஸ்கோ 10,000 வட கொரிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியதாகவும், உக்ரைனுக்கு எதிராக போரில், ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்இந்தநிலையில், உக்ரைன் இந்த போரில் தனியாக வெற்றி பெற முடியுமா என்பதில் தெளிவில்லை என்றும் ஜலுஸ்னி கூறியுள்ளார்.000
கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாக கூறி உள்ளனர்.விலைவாசியை குறைப்பதற்காக சில அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளைமறுதினம் (25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளைமறுதினம்முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.00
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை 22.11.2024சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 11.45 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று இரவு 11.34 வரை மகம். பின்னர் பூரம். உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
ஒருவன் பள்ளி முடிந்து மாநகர பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்,அடுத்த ஸ்டாப்பில் அவர் ஆசிரியர் ஏறினார், அந்த மாணவன் அமர்ந்து இருந்த சீட்டு காலியாக இருக்க அங்கே சென்று அமர்ந்தார் !ஆசிரியரை பார்த்தவுடன் மாணவன் எழுந்தான் !உடனே ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார் ! மாணவனிடம் நான் ஆசிரியர் நீ மாணவன் ! இங்கு எல்லாரும் பயணிகள் தான் ! என்றார் !அடுத்த ஸ்டாப் வந்தது மறுபடியும் எழுந்திருக்க மீண்டும் ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார்!பஸ் கிளப்பியது !அடுத்த ஸ்டாப் வந்தது மறுபடியும் எழுந்திருக்க மீண்டும் ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார்!இப்பொழுது மாணவன் அழ ஆரம்பித்தான் !ஆசிரியர் என்னாச்சு என்று கேட்க !ஐயா நீங்கள் பஸ்ஸில் ஏறிய ஸ்டாப்பிங்ல தான் இறங்கணும் நீங்க தான் இப்ப வரைக்கும் இறங்கவிடாமல் தடுக்கிறீர்கள் !
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124 உறுப்பினர்கள் அல்லது உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், காசாவில் போர்க்குற்ற செயல்களுக்காக வியாழன் (21) அன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்தது.மேலும், காசாவிற்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை நெதன்யாகு கட்டுப்படுத்தியதாகவும் ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.மேற்கு நாடுகளுடன் இணைந்த ஜனநாயக நாட்டின் தற்போதைய தலைவருக்கு எதிராக ஐசிசி பிடியாணை பிறப்பித்தது இதுவே முதல் முறை.இந்த நிலையில், குறித்த உத்தரவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர், ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது யூத எதிர்ப்பின் விளைவு, அத்துடன் அது ஒரு நவீன ட்ரேஃபஸ் விசாரணைக்கு சமமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.ட்ரேஃபஸ் விசாரணை 1894 மற்றும் 1906 க்கு இடையில் பிரான்சில் ஒரு அரசியல் மற்றும் நீதித்துறை ஊழலாக இருந்தது.ஜேர்மனியர்களுக்கு இராணுவ இரகசியங்களை விற்ற தேசத்துரோக வழக்கில் அந்த விசாரணையில் ஒரு யூத பிரெஞ்சு இராணுவ அதிகாரி Alfred Dreyfus தவறாக தண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.
ஒரு பெரியவர் ரோட்டில் நொண்டி நொண்டி நடந்து கொண்டு இருக்க!இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நல்ல மனதுக்காரர் வண்டியை நிறுத்தி, ஐயா ! என்னாச்சு என்று அன்புடன் கேட்க!அதற்கு அந்த பெரியவர் ஒரு ஆட்டோ காலில் ஏற்றி விட்டு சென்று விட்டார் என்று சொல்ல!அவரோ ஐயா ! எனக்கு பக்கத்து தெருவில் இருக்கும் டாக்டர் என் நண்பர் தான் வாருங்கள் காலுக்கு வைத்தியம் பார்த்து விட்டு நீங்கள் வீடு செல்லலாம் என்று சொல்ல!அந்த பெரியவர் வேண்டாம் ப்பா! நேரம் ஆகுது வீட்டுக்கு போகனும் என்று சொல்ல!இவர் இல்லை பத்து நிமிடம் தான் ஆகும் என்று வலுக்கட்டாயமாக அவரை வண்டியில் அமர வைத்து மருத்துவமனை சென்று காலுக்கு மருந்து போட்டு முடிக்க !பெரியவர் மறுபடியும் தம்பி ரொம்ப நன்றிப்பா நான் சீக்கிரம் வீட்டுக்கு மனைவிக்கு இட்லி வாங்கிட்டு போகனும் ரொம்ப பசியுடன் இருப்பார் என்று சொல்ல!அதற்கு அவர் சார் உங்களுக்கு காலில் அடி பட்டு இருக்கு என்று தெரிந்தால் உங்கள் மனைவி உங்கள் மேல் கோபம் கொள்ள மாட்டார், என்று சொல்ல!அதற்கு அந்த பெரியவர் தம்பி என் மனைவி மன நலம் குன்றியவர்கள் நான் யார் என்றே அவர்களுக்கு தெரியாது என்று சொல்ல!அதற்கு அவர் ஐயா ! அவர்களுக்கு உங்களை தெரியாது என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் இந்த அவசரம் என்று சொல்ல !அதற்கு அந்த பெரியவர், தம்பி என் மனைவிக்கு என்னை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவரை எனக்கு நன்றாக தெரியுமே! என்றார் அமைதியாக!
தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு?New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!!அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு.இந்த மணியின் வயது?-�15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரையொதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான, ‘மெளரி’ இனத்து மக்கள், இது என்னவென்று தெரியமால், உணவு தயாரிக்க, இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு, இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.�William Colenso, இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ் மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுவந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில், பொறிக்கப்பட்டுள்ள வரி- ‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ இஸ்லாமியராயினும் தம் தாய்மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்றபோது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.-B.H.அப்துல்ஹமீத்
கோடி சுவாமிகள் (கோடி தாத்தா என்றும் இன்னொரு பெயர் உண்டு) என்பவர் பொள்ளாச்சி பக்கத்தில் புரவிபாளையம் என்ற கிராமத்தில் ஆன்மிகத்தால் பிரசித்திபடுத்திய ஒரே பெரிய சித்தர்.இயற்கை மூலிகைகளில் அசாதாரண நிபுணராக இருந்தார், நோய்களை இயற்கை வழியில் குணப்படுத்தினார்.அவருடைய தவம், தியானம், மற்றும் யோக திறன்களால் பலர் வாழ்க்கையில் ஆன்மிக ஒளியை கண்டார்கள். அவரின் அன்பும் அருளும் எல்லாருக்கும் சமமாக இருந்ததால்தான் இன்றும் அவரை வணங்கும் பக்தர்கள் எண்ணிக்கையற்றவர். அக்டோபர் 11, 1994 ஆம் ஆண்டு சித்தியடைத்தார்.புரவிபாளையம் இடத்தின் சிறப்புஇப்பொழுது புரவிபாளையத்தில் கோடி சுவாமிகளின் சமாதி அமைந்துள்ளது. அந்த இடம் புனிதத்தலமாக பார்க்கப்படுகிறது. யார் அங்கு சென்று வேண்டிக்கொண்டாலும் மனநிறைவு அடைவார்கள் என நம்புகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை அங்கு திருவிழா நடக்கும், அதில் பலரும் கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். அவரின் தத்துவங்கள் எளிமையான வாழ்க்கை நடத்தவும், மன அமைதியையும் பொறுமையையும் பெறவும் வழிகாட்டும்.அன்னதானத்தின் முக்கியத்துவம்• கோடி சுவாமிகள் அன்னதானத்தை மிக உயர்ந்த தர்மமாக கருதினார்.• உண்ணும் உணவு உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பதே அவரது சித்தாந்தம்.• தினமும் அவருடைய திருவடியின் வழிகாட்டுதலின்படி பல இடங்களில் நித்ய அன்னதானம் நடக்கிறது.• 2018-ல் தொடங்கிய Kodi Swamigal Trust இதை மேற்பார்வை செய்கிறது .கோடி சுவாமிகள் சமாதி• அவரது சமாதி ஸ்தலம் புரவிபாளையம் மற்றும் தபோவனம், பெருங்குடியில் அமைந்துள்ளது.• ஆண்டுதோறும் குரு பூஜை பெருவிழா நடந்து, பல பக்தர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.கோடி சுவாமிகள் திருப்பணி மற்றும் மரபு• அவரின் ஆசீர்வாதம் பலருக்கு வாழ்க்கை மாற்றத்தை அளித்தது.• பக்தர்கள் அவரிடம் தொல்லைகளுக்கான தீர்வுகளை நாடி வந்தனர்.• அவரின் தத்துவம் மூலம் பணம் மட்டும் போதாது, பகைவருக்கும் உதவ வேண்டும் என்பதில் வலியுறுத்தினார்.
முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்" என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். "ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்.. குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?” என்றனர் மற்றவர்கள்.மூத்த சீடர். "குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.மூத்த சீடர் வந்ததும், "வந்து விட்டாயா...எங்கே நாவல்பழம்?" என்றார்.அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.ஒரு சீடர் குருவிடம், “குருவே.. தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?” என்றார்.குரு சிரித்தபடி, "என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!" என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, "ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?” என்று கேட்டார்.குரு சிரித்தபடி, “இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!
விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.“யாரது?” என்று மனைவி கேட்டாள்.“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”“நீங்க உதவி செஞ்சீங்களா?”“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”“பார்த்தீங்களா?3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”“ஆமா சார்”“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”“எங்கே இருக்கீங்க”.....“இங்கதான் உங்க கார்டனில் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....”
ஒரு மாடு மேய்ச்சலுக்காக ஒரு காட்டுக்குள் சென்றது.மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது.மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது. ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது.புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது புலி சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தனர். இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டனர்.சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது,மாடு: உனக்கு மாஸ்டர் அல்லது உரிமையாளர் இருக்கிறாரா?புலி: நான் காட்டில் ராஜா. நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின் உரிமையாளன்.மாடு: ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.புலி: நீயம் தான் என்ன போல சாகப்போற. உங்கிட்ட மாஸ்டர் இருந்தாலும் உன் நிலை என்னுடையது போலவே தான் இருக்கு.மாடு: இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டிற்கு வந்து என்னை தேடி பார்ப்பர், அவர் நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த மண்ணிலிருந்து வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களை யார் அழைத்துச் செல்வார்கள்?சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.செல்லும்முன், மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.மாடு - அர்ப்பணிப்புள்ள இதயத்தின் சின்னம்.புலி - இறுமாப்புள்ள மனம்.உரிமையாளர் - கடவுளின் சின்னம்.மண் - இதுதான் உலகம்.யாரையும் நம்பாமல் இருப்பது ஒரு நல்ல விஷயம்?! ஆனால் நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும்.
தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளையதினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காளவிரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000ரூபாய் கொடுப்பனவானது இந்த மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட அந்த சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (22) முதல் குறித்த முதியோர்க் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளது. அதேநேரம், அஸ்வெசும கொடுப்பனவைப் பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்கள் அவர்களின் கொடுப்பனவை, வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.000
2024ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.000
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் நிதியமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளது.போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாகச் சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காசாவில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் கூறி ஹமாஸ் இராணுவ தளபதியாக இருந்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் முகமது தெய்ஃப் ஆகியோருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன000
கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி துறைசார் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.எனினும், அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை. இந்த முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று செயலாளர் மேலும் கூறியுள்ளார்.000