Feed Item
Added a post 

மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார்.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள்.

அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங்களா? சரிங்க ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்தியிருக்கீங்களா… இல்ல அதே எட்டாயிரம்தானா?” தன் பங்குக்குக் கேட்டான் மணி.

“வாடகை என்ன வாடகை? அது பார்த்துக்கலாம்… ஆனா ஒரு கண்டிஷன்…” பழனியப்பன் சொல்லி முடிக்கவில்லை…

அதான் தெரியுமேய்யா. வாடகைக்கு வர்றவர் சின்ன வயசா இருக்கணும். பேங்க் அல்லது கவர்மென்ட் வேலையா இருக்கணும். அப்பதான் ரெண்டு வருஷத்துல டிரான்ஸ்பராகி வீட்டைக் காலி பண்ணுவாங்க. குடும்பத்துல நாலு பேருக்கு மேல இருக்கக்கூடாது. முக்கியமா வயசானவங்க யாரும் இருக்கக்கூடாது அதானே? ” - கேட்டான் மணி.

இல்லே மணி! நான் இத்தனை வருஷமா அப்படி கண்டிஷன் போட்டு எத்தனையோ வயசானவங்களை அவங்க பிள்ளைங்ககிட்டேயிருந்து பிரிச்சுட்டேன். அந்தப் பாவமோ என்னவோ, என் ரெண்டு பிள்ளைகளும் எங்களைத் தனியா விட்டுட்டு வெளிநாட்டுல செட்டிலாகிட்டாங்க.

இப்போ வாடகைக்கு வரப்போற குடும்பத்துல பெரியவங்க இருந்தா எனக்கும் என் மனைவிக்கும் சகலத்துலயும் துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால வாடகைக்கு வர்ற குடும்பத்துல வயசானவங்க இருக்கணும். அதான் கண்டிஷன்....... வாடகையைக்கூட குறைச்சுக்கலாம்!” சற்று தழு தழுத்த குரலில் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் பழனியப்பன்.

  • 433