Feed Item
Added a post 

காலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போ ஒரு பெரியவர் லிப்ட் கேட்டார். அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டேன்.

"எங்கய்யா போனும்?"

"தமிழரசன் கல்யாண மண்டபத்துக்குப் பின் புறம் தான் என் வீடு".

"சரி வாங்க போலாம்".

"திடீர்னு எலப்பு வந்திருச்சி அதான் ஆஸ்பத்திரி வந்து ஊசி போட்டேன். பஸ்ஸுக்கு நின்னு நின்னு பார்த்தேன் பஸ் வரல. உடம்புக்கு வேற முடியல அதான் லிப்ட் கேட்டேன். யாரும் நிறுத்தல நீங்க தான் நிறுத்திருக்கீங்க".

"சரி ஐயா, உங்களுக்குப் பசங்க இல்லையா?"

"இல்ல தம்பி! நாலு பொண்ணுங்க தான். ஒன்னு செத்து போச்சி, மூன்று பேத்துக்கு கல்யாணத்தை முடிச்சிட்டேன். பொண்டாட்டியும் இறந்துட்டா. இப்போ நான் மட்டும் தனியாத் தான் இருக்கேன்".

"எப்படி தனியா இருக்கீங்க?"

"ஒரு பொண்ணு மாசம் ஆயிர ரூவா கொடுப்பா, ஒரு பேரன் 500 ரூவா கொடுக்கான். அதை வச்சிட்டு மதியம் அம்மா உணவகத்தில் சாப்ட்ருவேன். காசு இருந்தா நைட் சாப்பாடு. இல்லனா தண்ணிய குடிச்சிட்டுப் படுத்துக்கிட வேண்டியது தான்".

"முதியோர் பென்சன் வாங்கறீங்களா?"

"அதுக்கு அப்ளை பண்ணேன். அவன் 5000 ரூவா கேட்டான். என்னிடம் மூவாயிரம் ரூவா தான் இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவன் 3000 ரூவா உயரதிகாரிகளுக்கே சரியாப் போயிடும். எனக்கு வேண்டாமானு கேட்கறான்".

"காசெல்லாம் ஒண்ணும் தர வேண்டாம். நான் ஒரு நம்பர் தர்றேன், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை நம்பர். அதுக்கு போன் பண்ணி புகார் கொடுங்க. அப்புறம் அவங்க சொல்றபடி செய்யுங்க. மத்ததை அவங்க பார்த்துப்பாங்க".

"தம்பி நான் எப்படி அவங்ககிட்ட பேச?", (தயக்கத்தோடு).

பின் நானே அவர் செல்லில் இருந்து போன் பண்ணி புகார் பண்ணேன். அந்த பெரியவரிடமும் பேச வைத்தேன். இன்றைக்கே நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

"ரொம்ப நன்றி தம்பி! ஏன் வண்டிய திருப்பறீங்க? நீங்க இந்த பக்கம் போகலையா?"

"இல்லை ஐயா, உங்களை வீட்டில் விடறதுக்கு தான் வந்தேன். என் வீடு ரொம்ப முன்னாடியே இருக்கு!". என்றேன்.

  • 279