Feed Item
Added a news 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். முக்கியமாக, விஜய பிரபாகரன் தாயாரும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில நாட்கள் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடையே பேசிய அவர்,"வேட்பாளர் விஜய பிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் வீட்டு பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. அவருக்கு இன்னும் திருமணம்கூட நடைபெறவில்லை. உங்களுக்காகவே உழைக்க வந்திருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதும் உங்கள் தலைமையில்தான் அவரின் திருமணத்தை நடத்திவைப்பேன்" என்று உருக்கமாக கூறியிருந்தார். தாய் பிரேமலதாவை தொடர்ந்து, அவரது சகோதரர் சண்முகப் பாண்டியனும் விஜயபிரபாகரனுக்காக விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீதி வீதியாக சென்று தனது சகோதரருக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகரில் அவரது சகோதரர் விஜயபிரபாகரனுக்காக அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சண்முக பாண்டியன் உட்பட அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • 327