Feed Item
Added a news 

பெங்களூரு விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் படம் பிடித்து சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டதாக யூடியூபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் கொழிக்கும் தொழில்களில் யூடியூப் சேனல் நடத்துவதும் ஒன்றாகி விட்டது. படித்தவர் முதல் படிக்காதவர் வரை பலர் யூடிப் துவங்கி பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டி அதன் மூலம் பெறப்படும் விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருகின்றனர்.

இதற்காக அதிர்ச்சி தரும் வகையிலும், சட்டவிரோதமாகவும் காட்சிகளைப் படம் பிடித்து பலர் போலீஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி பெங்களூருவில் சிக்கிக் கொண்ட யூடியூபர் பெயர் விகாஸ் கவுடா.

அப்படி இவர் என்ன செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாஸ் கவுடா வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், விமான நிலைய ஓடுபாதையை படம் பிடித்துள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் விகாஸ் கவுடா வெளியிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விமான நிலைய பகுதிக்குள் சென்று வீடியோ எடுத்து அதை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட தேவனஹள்ளியைச் சேர்ந்த விகாஸ் கவுடாவை , விமான நிலைய போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அவர் விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் சுமார் நான்கரை மணி நேரம் இருந்து வீடியோ எடுத்தது தற்போது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து யூடியூபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 321