Feed Item
Added a post 

2009 ஆம் ஆண்டு.

தாய்லாந்து நாட்டின் ரேயாங் காட்டில் உள்ள ஒரு யானை உயிருக்குப் போராடியவண்ணம் பெருந்துயருடன் இருந்தது.

31 வயதான பிளாய் தான்க் என்ற பெயருடைய அந்த யானைக்கு Parasitic என்ற ஒட்டுண்ணியின் தாக்குதலால் Trypanosomiasis என்ற கொடிய ஒட்டுண்ணித் தாக்குதல் நோய் வந்திருந்தது.

Sleeping sickness காரணமாக அவதியுற்ற அந்த யானை கடுமையான காய்ச்சலுக்கு ஆளானது.

பசியின்மையும், முகம் கழுத்து வயிற்று வீக்கத்தாலும், கால்கள் மரத்துப் போன தன்மையாலும், இரத்தசோகையும் ஏற்பட்டு மரணவாசலின் நுழைவாயிலில் தான்க் நின்று கொண்டிருந்தது.

அத்தகைய சூழலில் அந்த யானையைக் கண்டார் Dr.Pattrapol

எவ்வாறேனும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்று Lampang என்ற‌ இடத்தில் உள்ள Forest Industry Organisationக்கு எடுத்துச் சென்றார்.

அங்கிருந்த மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள், தேசிய பூங்கா பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோர் துணையுடன் தொடர்ந்து சிகிச்சையளித்தார்.

சில மாதங்கள் தொடர் கவனிப்பின் விளைவாக அந்த யானை நோயின் பிடியிலிருந்து வெளியேறியது. மீண்டும் அதைக் கொண்டு போய் ரேயாங் வனப்பகுதியில் விட்டு விட்டனர்.

அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்பு Dr.Pattrapol வழக்கம் போல் வனப்பகுதியில் தன்னுடைய ரோந்துப் பணியினை மேற்கொண்டிருந்தார்.

திடீரென்று மரங்களுக்கு இடையில் இருந்து ஒரு பிளிறல் சத்தம் கேட்டது. அது யானைகள் வழக்கமாகச் செய்கின்ற பிளிறல் ஒலியினைப் போன்று இல்லை.

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் ; உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்" என்ற கண்ணதாசனின் பாடல்வரியைக் கேட்டுள்ளீர்களா?

ஊருலகிற்கான பொதுப்பார்வையைத் தவிர்த்து ஒரேயொருவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பார்வையைப் போல அந்த ஒலி தனக்கே தனக்கான அழைப்பொலி என்பதை உணர்ந்தார் டாக்டர்.

வண்டியை நிறுத்தி காட்டினுள் நோக்கினார். அவரை நோக்கி பிளிறியபடி வந்து கொண்டிருந்தது ஒரு யானை.

அடையாளம் கண்டு கொண்டார் Dr.Pattrapol. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பிளாய் தான்க் தான் அது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த யானை டாக்டரைப் பார்த்தவுடன் மறக்காமல் நினைவில் வைத்திருந்து அவரை நோக்கி விரைந்து ஓடிவந்தது.

ஓடிவந்த தான்க்கை நோக்கி கையை நீட்டினார் மருத்துவர். அதுவும் தன்னுடைய தும்பிக்கையை நீட்டி அன்பினையும் நன்றியையும் வெளிப்படுத்தியது.

ஒன்றல்ல... இரண்டல்ல...

நூறு மொழிகளில் தன்னுடைய அன்பினை எவரேனும் வெளிப்படுத்தி கேட்டிருக்கிறீர்களா நீங்கள்?

ஒன்றல்ல... இரண்டல்ல...

கோடி சொற்களில் பாசத்தைப் பகிர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?

பாவம்... அந்த யானைக்குப் பிளிறி கத்துவதைத் தவிர வேறேதும் தெரியாது.

ஆயினும் நீட்டிய தும்பிக்கையால் மருத்துவரின் கைகளைத் தடவியபோது அதன் கண்களில் வழிந்த கண்ணீரில் கலந்திருந்த அன்பினையும் நன்றியையும் விவரிக்க ஆயிரம் கவிதைகளாலும் முடியாது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?"

  • 842