உன் கையில் வாழ்க்கை
ஒருவர் ஒரு ஊருக்கு வந்து தங்கியிருந்தார். மக்கள் கூட்டங்கூட்டமாக வந்திருந்து, அவரை வணங்கி வழிபட்டு அவரின் வழிகாட்டுதலால், வார்த்தைகளால் நிறைவடைந்தனர். ஆனால் ஒரு மனிதனுக்கு மட்டும் அந்தத் துறவியின் புகழ் வெறுப்பைத்தந்தது. அவரை மட்டம் தட்டி ஏளனப்படுத்த வேண்டும் என எண்ணியபடி தன்னுடைய உள்ளங்கையில் ஒரு பட்டாம்பூச்சியை வைத்து ஒளித்தபடி, தன் கைகளை முதுகுக்குப்பின்புறம் மறைத்துக்கொண்டு துறவியின் முன் சென்று நின்றான்
"ஐயா, உம்மை ஞானி என்கிறார்கள், என் கையில் உள்ள பூச்சி உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா என்பதை கண்டறிந்து சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று அவரிடம் சவால் விட்டான். பூச்சி செத்துவிட்டதாக சொன்னால், அதை உயிருடன் காண்பிக்கவும், பூச்சி உயிருடன் உள்ளதாக சொன்னால், அதை உள்ளங்கையிலேயே நசுக்கி சாகடிக்கவும் அந்த மனிதன் எண்ணி உள்ளதை துறவி புரிந்து கொண்டார். "அந்த பூச்சி உயிருடன் இருப்பதும், இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது" என்று சாதுர்யமாக மறுமொழி கூறினார். இந்த பதிலை எதிர்பாராத அந்த மனிதன் தடுமாறிப்போனான். அவனால் அடுத்து ஏதும் பேச இயலாத நிலையேற்பட்டதால் வெட்கித் தலைகுனிந்து தோல்வியைத் தழுவினான்.