·   ·  1472 posts
  •  ·  0 friends

துப்பறியும் கதை

எக்மோரில் உள்ள மிகப்பெரிய பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தார் பிரபல தொழிலதிபர் ஜே.கே.

அதிகாலைப் பனி விலகாத அந்த நேரத்தில், நீச்சல் குளத்தைச் சுற்றிலும் போலீஸ் வளையம் நின்றிருந்தது.

​டி.எஸ்.பி ராஜேஷ் சம்பவ இடத்திற்குள் நுழைந்தான். அவனது கூர்மையான கண்கள் குளத்து நீரையும், சடலத்தையும் அலசின.

"அக்‌ஷதா, என்ன ரிப்போர்ட்?"

​அக்‌ஷதா, குளத்தின் ஓரத்தில் மண்டியிட்டு சடலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"ராஜேஷ், மேலோட்டமா பார்த்தா டிராவுனிங் தான். ஆனா லங்ஸ்ல தண்ணி ரொம்ப கம்மி. பிளட்ல சக்ஸினைல்கோலின் கலந்துருக்கு. இது ஒரு ஸ்ட்ராங்கான பேரலைட்டிக் ஏஜென்ட். நரம்புகளை முடக்கிடும். கை கால் விளங்காமப் போய், மூச்சு விட முடியாம தண்ணில மூழ்கியிருக்கார்."

​பக்கத்திலேயே லேப்டாப்பை வைத்துக்கொண்டு ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை ஆக்சஸ் செய்து கொண்டிருந்தான் வசந்த்.

"பாஸ், பூல் ஏரியா சிசிடிவி நைட் பத்தரை மணிக்கு எக்ஸாக்ட்டா பத்து நிமிஷம் லூப் ஆகியிருக்கு. வீடியோவை ஃப்ரீஸ் பண்ணி ரொம்ப ப்ரொஃபஷனலா ஹேக் பண்ணியிருக்காங்க."

​வசந்த் அப்படியே தன் பார்வையை அக்‌ஷதா பக்கம் திருப்பினான்.

"அக்‌ஷதா, உன் கண்ணைப் பார்த்தாலே என் உடம்பெல்லாம் டோட்டலா பேரலைஸ் ஆகுது. எனக்கு அந்த கெமிக்கல் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் பக்கத்துல வாயேன், பிரீத்திங் ரொம்ப கஷ்டமா இருக்கு, மவுத் டூ மவுத் சிபிஆர் குடுப்பியா?"

​அக்‌ஷதா அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

"உன் வாயில சிபிஆர் குடுக்க மாட்டேன், ஃபார்மாலின் ஆசிட் தான் ஊத்துவேன். உன்னைப் பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது. மூடிட்டு சர்வரை ட்ரேஸ் பண்ணு."

​வசந்த் சிரித்துக்கொண்டே,

"நீ ஆசிட் ஊத்துனாலும் அது எனக்கு அமிர்தம் தான் பேபி,"

என்று சொல்லிவிட்டு விரல்களை கீபோர்டில் பறக்கவிட்டான்.

​ராஜேஷ் இருவரையும் பார்த்து லேசாக முறைத்தான்.

"வசந்த், கட் இட். ஃபோகஸ். ஐபி அட்ரஸ் எங்க இருந்து வருது?"

​வசந்த் சீரியஸானான்.

"பாஸ், ஐபி மாஸ்க் பண்ணியிருக்காங்க. ஆனா ரவுட்டிங் ஜே.கே-வோட பிசினஸ் பார்ட்னர் தினேஷ் நெட்வொர்க்ல இருந்துதான் வருது."

​ராஜேஷின் ஜீப் நேராக தினேஷின் கார்ப்பரேட் அலுவலகத்திற்குச் சென்றது. அங்கே தினேஷ் மிகவும் கூலாக மினி கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தான். ராஜேஷைப் பார்த்ததும் எந்தப் பதற்றமும் இல்லாமல் புன்னகைத்தான்.

​"ஜே.கே கொலை நடந்த நேரத்துல, கேமரா ஹேக் ஆனது உங்க நெட்வொர்க்ல இருந்துதான் தினேஷ்," ராஜேஷ் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

​தினேஷ் சிரித்தபடியே பந்தை தட்டிவிட்டான்.

"லுக் மிஸ்டர் ராஜேஷ், என் கம்பெனி சர்வர் பப்ளிக் டொமைன்ல இருக்கு. யாரு வேணாலும் ஸ்பூஃப் பண்ணலாம். எனக்கும் ஜே.கேவுக்கும் ஆயிரம் பிசினஸ் தகராறு இருக்கலாம், ஆனா கொலை பண்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. நான் தான் கொலை செஞ்சேன்னு ஒரு சின்ன எவிடென்ஸ் காட்டுங்க, நானே தப்ப ஒத்துக்கிட்டு உங்க ஜீப்ல ஏறுறேன்."

​ராஜேஷ் அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தான். "அப்போ உங்களுக்கு எதுவும் தெரியாதா?"

​"சார், நாவல்ல வர்ற மாதிரி தியரி எல்லாம் எங்கிட்ட பேசாதீங்க. எவிடென்ஸ் இல்லாம என்னை அரெஸ்ட் பண்ண முடியாது. கேன் ஐ லீவ் நவ்?" தினேஷ் மிகுந்த திமிருடன் சொல்லிவிட்டு நகர்ந்தான். அவனிடம் குற்ற உணர்ச்சியோ, பயமோ துளி கூட இல்லை.

​ராஜேஷ் மீண்டும் நீச்சல் குளத்திற்கே வந்தான். அக்‌ஷதா இன்னும் சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

​"அக்‌ஷதா, அந்த கெமிக்கல் உடம்புல எப்படி போயிருக்கும்? இன்ஜெக்ஷன் மார்க் எதுவும் இல்லையே?" ராஜேஷ் சிந்தனையுடன் கேட்டான்.

​"இல்ல ராஜேஷ். இது ட்ரான்ஸ்டெர்மல். அதாவது தோலின் மூலமா உடம்புக்குள்ள போயிருக்கு. தண்ணில நனையும்போது ஆக்டிவேட் ஆகுற மாதிரி, ஏதோ ஒரு ரப்பர் பொருள்ல அதைத் தடவி இருக்கணும். அந்தப் பொருள் ஜே.கே உடம்புல உரசிருக்கணும்."

​அப்போது வசந்த் லேப்டாப்புடன் ஓடி வந்தான்.

"பாஸ், ஜே.கே-வோட பர்சனல் மெயிலை ஹேக் பண்ணிட்டேன். தினேஷ் கம்பெனியில இருந்து நேத்து காலையில ஜே.கே-வுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு. ஒரு லிமிடெட் எடிஷன் ஸ்விம்மிங் காகிள்ஸ்."

​ராஜேஷுக்குக் காணாமல் போன முடிச்சு கிடைத்தது.

"அந்த காகிள்ஸ் ரப்பர்ல தான் விஷம் தடவப்பட்டிருக்கு. அதைப் போட்டுட்டு ஸ்விம் பண்ணும்போது ஜே.கே பேரலைஸ் ஆகி மூழ்கிட்டான். அந்த பத்து நிமிஷ கேமரா ஃப்ரீஸ்ல தினேஷின் ஆட்கள் யாரோ உள்ள வந்து அந்த காகிள்ஸை மட்டும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. மாஸ்டர் பிளான்."

​ராஜேஷ் உடனடியாக தினேஷுக்கு போன் செய்தான்.

"தினேஷ், நீங்க அனுப்புன அந்த ஸ்விம்மிங் காகிள்ஸ் தான் கொலை ஆயுதம். இப்போ தப்பிக்க முடியாது."

​எதிர்முனையில் தினேஷ் சத்தமாகச் சிரித்தான்.

"பிரில்லியன்ட் தியரி ராஜேஷ் சார். ஆனா அந்த காகிள்ஸ் பூல்ல கிடைச்சுதா? லாஜிக் முக்கியம் சார். வெப்பன் இல்லாம எப்படி கோர்ட்ல ப்ரூவ் பண்ணுவீங்க? என்னை தொடக் கூட முடியாது உங்களால. வேணும்னா ட்ரை பண்ணிப் பாருங்க."

​தினேஷ் போனை வைத்துவிட்டான். ராஜேஷ் கோபத்துடன் சுவரை ஓங்கி அடித்தான். தினேஷ் சொல்வது சட்டப்படி உண்மை. ஆயுதம் இல்லாமல் அவனை நெருங்க முடியாது.

​அப்போது வசந்த் தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்தபடி நின்றான்.

"பாஸ்! ஜே.கே-வோட மனைவி ஷில்பா நேத்து நைட்டே கோவா போயிட்டா. தினேஷுக்கு ஆள் செட் பண்ணி குடுத்ததே அவளாத்தான் இருக்கணும். காகிள்ஸை அவதான் எடுத்துட்டுப் போயிருக்கா. இப்போ இன்ஸ்டாகிராம்ல ஒரு செல்ஃபி போஸ்ட் பண்ணிருக்கா பாருங்க."

​ராஜேஷும் அக்‌ஷதாவும் வசந்தின் லேப்டாப் திரையை நெருங்கினார்கள்.

​அக்‌ஷதா திரையை உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் கத்தினாள்,

"ராஜேஷ்...அந்த போட்டோல ஷில்பா தலையில ஸ்டைலுக்கு மாட்டியிருக்கிறது இங்க காணாமப் போன அதே ஸ்விம்மிங் காகிள்ஸ்... அதோட கோவா வெயில்ல அவ முகம் முழுக்க வியர்த்து வழியுது!"

--ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்

  • 46
  • More
Comments (0)
Login or Join to comment.