- · 0 friends
முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்
முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப்படும் இந்த முத்து ஆபரணங்கள் எத்தனையோ படையெடுப்புக்களில் இருந்து தப்பித்து வந்துள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.
அது நவாப்கள் ஆட்சி செய்த காலம். நமது கோவில் சொத்துக்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன. பல கோவில்கள் தகர்க்கப்பட்டன.
அப்போது ஒரு படை அதன் தளபதி தலைமையில் தென்தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, மயிலாடுதுறை உள்ளிட்ட தலங்களை குறிவைத்து புறப்பட்டது.
வரும் வழியில் பல கோவிகளுக்குள் இப்படையினர் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்தனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் சரவணப் பிள்ளை என்பவர் அப்போது பொக்கிஷ காப்பாளராக இருந்தார்.
இத்தலத்தே எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட அவர் முருகனுக்கு அடிக்கடி முத்து ஆபரணங்களை சூட்டி அழகு பார்ப்பார்.
கோவில் நகைகள் அனைத்திற்கும் உரிய கணக்குகளை நிர்வகித்து வந்த அவர், அவற்றை பத்திரமாக கையாண்டு முறையாக பராமரித்து வந்தார்.
நகைகளை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பார். அதன் பொலிவு எந்தவகையிலும் குறைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இப்படையினர் குடந்தைக்கு அருகவே ஒரு கோவிலில் கொள்ளையடித்தனர். அந்தக் கோவிலில் பணியாற்றிய சரவணப் பிள்ளையின் மைத்துனன் உடனே தனது மாமாவுக்கு இது குறித்து தகவலை தெரியப்படுத்தி அவரை உஷார்படுத்தினான்.
நவாப்பின் படைகள் விரைவில் வைத்தீஸ்வரன் கோவிலை முற்றுகையிடப் போகின்றனர் என்பதை அறிந்த சரவணப் பிள்ளை பதறி துடித்தார்.
“கொடியவர்கள், ஆண்டாண்டு காலமாக இங்குள்ள நகைகளை பறித்துச் சென்றால் என் செய்வேன்? முருகா நீயே துணை… உன் பொருளை காக்க என் உயிர்போனாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கதறியபடி முத்துக்குமார சுவாமியிடம் முறையிட்டார். பின்னர் கோவிலேயே கண்ணயர்ந்துவிட்டார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முத்துக்குமரன், “அன்பனே கவலை வேண்டாம். வரும் படைத்தளபதிக்கு நாம் சூலை நோயை தருகிறோம்.
அவன் வயிற்று வலியால் துடிப்பான்… என்ன மருந்து உட்கொண்டாலும் அவனுக்கு நோய் நீங்காது. நாளை காலை நீ அவனை சந்தித்து திருச்சாந்துருண்டையுடன் இந்த மருந்தைக் கொடு.
இதை உட்கொண்டவுடன் அவனுக்கு வலி நீங்கிவிடும். பிரதியுபகாரமாக கோவில் நகைகளை காப்பாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு மறைந்தான்.
திடுக்கிட்டு விழித்த சரவணப்பிள்ளை, தனது தலைமாட்டுக்கு அருகில் ஒரு சிமிழிக்குள் மருந்து இருப்பதைக் கண்டார்.
“முருகா… முத்துக்குமரா… கண்கண்ட தெய்வமே… உன் கருணையே கருணை” என்று முருகனின் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.
மறுநாள் விடிந்தது, தளபதியை தேடிப் புறப்பட்டார். புள்ளிருக்கு வேளூருக்கு சற்று தொலைவில் ஒரு இடத்தில் படைகள் கூடாரமிட்டு தங்கியிருப்பதை பார்த்தார்.
அங்கு சென்று விசாரித்தபோது, தளபதிக்கு உடல் நலமில்லாத காரணத்தால், மேற்கொண்டு படையை செலுத்தாமல் ஓய்வெடுப்பதாக வீரர்கள் கூறினர்.
அவர்களிடம் “உங்கள் தளபதியின் நோயை தீர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் அனுமதித்தால் அவரை சந்தித்து இதைக் கொடுப்பேன்” என்றார்.
காவலாளிகள் உடனே கூடாரத்தின் உள்ளே சென்று வலியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தளபதியிடம் விஷயத்தைக் கூற, “உடனே அவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
உள்ளே வந்த சரவணப் பிள்ளையையும் அவரது சிவப்பழமான தோற்றத்தையும் பார்த்தவுடனே அவனுக்கு அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது.
“நான் பக்கத்து ஊருக்கு செல்லும் வழியில் இங்கே உங்கள் படையினர் முகாமிட்டிருப்பதை பார்த்தேன்.
என்ன ஏது என்று விசாரித்தபோது தாங்கள் உடல்நலமின்றி இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னார்கள்.
உங்களுக்கு விருப்பம் என்றால், என்னிடமுள்ள சரவரோக நிவாரணி ஒன்றை தருகிறேன்.
அதை உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலி உடனே அகன்றுவிடும்!” என்றார் சரவணப் பிள்ளை.
‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருந்த தளபதிக்கு இவர் கூறியது அந்த ஆண்டவனே கூறியது போலிருந்தது.
“எத்தனையோ வைத்தியர்கள் இதுவரை வைத்தியம் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பலனில்லை. நேரம் செல்ல செல்ல வலி தான் அதிகரிக்கிறது.
உங்களைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. நீங்கள் மட்டும் என் நோயை குணப்படுத்திவிட்டால் நீங்கள் கேட்பது எதுவானாலும் தருகிறேன்” என்றான்.
“முதலில் நீங்கள் இம்மருந்தை சாப்பிடுங்கள் தளபதியாரே… பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றவர், அந்த மருந்தை எடுத்து முருகனை தியானித்து சடாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி தேனில் குழைத்து அதனுடன் வைத்தியநாதரின் பிரசாதமான திருச்சாந்துருண்டையும் தந்து உண்ணும்படி கேட்டுக்கொண்டார்.
நவாப்பின் தளபதியும் மருந்தை உட்கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வயிற்று வலி படிப்படியாக குறைந்து பின்னர் முற்றிலும் போயே போய்விட்டது.
தளபதிக்கு ஒரே மகிழ்ச்சி. “ஐயா… தக்க சமயத்தில் வந்து என் நோயை குணப்படுத்தினீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்”
“ஐயா.. நான் உங்களிடம் கேட்கப்போவது ஒன்றுமில்லை… புள்ளிருக்கு வேளூர் கோவிலை கொள்ளையடிக்கும் தங்கள் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாங்கள் இப்போதே உங்கள் நவாப்பிடம் திரும்பிச் செல்லவேண்டும்”
இதை சற்று எதிர்பாராத அத்தளபதி, “இதென்ன விசித்திரமான் வேண்டுகோளாக இருக்கிறதே?” என்றான்.
சரவணப் பிள்ளை நடந்த அனைத்தையும் கூறினார். உடனே இஸ்லாமியரான அந்த தளபதிக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.
“என் நோய் நீக்கிய உங்கள் ஆண்டவனை நான் பார்க்கவேண்டும்” என்று தன் விருப்பத்தை தெரிவித்தான். சரவணப் பிள்ளை சற்று தயங்கினார்.
“உங்கள் கோவில் நகைகள் ஒன்றைக் கூட தொடமாட்டேன் இது சத்தியம்” என்று பிள்ளை அவர்களிடம் சத்தியமும் செய்துகொடுத்தான்.
பின்னர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து உள்ளே நுழையாமல் முத்துக்குமார சுவாமியை முன்மண்டபத்தில் எழுந்தருளச் செய்து கண்குளிர தரிசித்தான்.
மேலும் சூலைநோயை நீக்கிய முத்துக்குமார சுவாமிக்கு தன்னிடம் உள்ள முத்துப்பந்தல், ஆலவட்டம், குடை, பல்லக்கு, கொடி, சாமரம் போன்ற பொருட்களை காணிக்கையாக கொடுத்தான்.
விசேஷ நாட்களில் தீபாராதனை முடிந்தவுடன், தனக்காக மற்றொரு தீபாராதனை செய்யும்படி பல நிபந்தங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றான்.
இன்றும் இது வைத்தீஸ்வரன் கோவிலில் வழக்கத்தில் உள்ளது. நேரில் சென்றால் பார்த்து மகிழலாம்.