·   ·  279 posts
  •  ·  0 friends

ஒருபிடி அரிசி

ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் பணக்காரனாக இருந்தும் கஞ்சனாக இருந்தார். ஒரு ரூபாயைக் கூட யாருக்கும் தரமாட்டார். ஆனாலும் அவருக்கு சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள துறவி ஒருவரை சந்திக்க சென்றார். துறவியிடம் சென்று, நான் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகிறேன் அதை அடைவதற்கு வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன் என்று வேண்டினார்.

அதற்கு அந்த துறவி அவரிடம் யாருக்கும் அநியாயம் செய்யாமல் தர்மம் செய் என்று கூறினார். ஆனால் அவருக்கோ தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்ய மனம் வரவில்லை. அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையையும் விடமுடியவில்லை.

அதனால் நாள்தோறும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி மட்டும் தருவோம். அப்படி தருவதனால் நம் செல்வமும் குறையாது. நமக்கு சொர்க்கமும் கிடைக்கும் என்று முடிவு செய்தார். அதன்படி தினமும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி தானம் தந்தார். மாதங்கள் சென்றன.

மீண்டும் அந்த ஊருக்கு அந்த துறவி வந்தார். அவர் வந்திருப்பதை அறிந்த அவர் அந்த துறவியை காணச் சென்றார். அந்த துறவி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். துறவியைப் பார்த்த அந்த பணகாரன் அவரை வணங்கினார். அவரை வணங்கிவிட்டு, துறவியிடம் ஐயா! தாங்கள் கூறியதுபோலவே நான் தினமும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி தானம் கொடுத்துக் கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு உறுதியாக சொர்க்கம் கிடைக்கும் அல்லவா? என்று கேட்டார்.

அதற்கு அந்த துறவி ஒன்றும் பேசாமல் தம் அருகில் இருந்த மரத்தின் அடிப்பகுதியை தன் விரல் நகத்தால் கீறத் துவங்கினார். அந்த பணக்காரரும் நீண்ட நேரம் பொறுமையோடு அங்கேயே காத்திருந்தார். ஆனால் துறவியோ அடி மரத்தை கீறுவதை தொடர்ந்து கீறிக் கொண்டே இருந்தார். பொறுமை இழந்த அந்த பணக்காரன் துறவியைப் பார்த்து, ஐயா! நான் கேட்டதற்கு தாங்கள் ஏதும் பதில் சொல்லாமல் நீண்ட நேரமாக இந்த மரத்தை நகத்தால் கீறிக் கொண்டே இருக்கிறீர்களே! என்று கேட்டார்.

அதற்கு அந்த துறவி, அந்த பணக்காரரிடம் நான் இந்த மரத்தை என் நகத்தால் வெட்டிக் கொண்டிருக்கிறேன் என்றார். இதை நான் வெட்டி முடிக்கும் வரை அமைதியாக இரு என்று கூறினார். இதைக் கேட்ட செல்வந்தனுக்கு சிரிப்பு வந்தது. ஐயா! இவ்வளவு பெரிய மரத்தை உங்கள் விரல் நகத்தால் வெட்ட முடியுமா? கோடாரியால் வெட்டினாலே பல நாட்கள் ஆகுமே என்று கேட்டார்.

அதற்கு துறவி நீங்கள் தினமும் ஒருபிடி அரிசியை தானம் செய்துவிட்டு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்படும்போது, என் விரல் நகத்தால் இந்த பெரிய மரத்தை வெட்ட முடியாதா? என்று கேட்டார். உடனே அந்த பணக்காரன் துறவியிடம் தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். மேலும் இன்று முதல் ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி சொர்க்கத்தை அடைவேன் என்று துறவியை வணங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

  • 1014
  • More
Comments (0)
Login or Join to comment.