- · 0 friends
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர்
அம்மன் : பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி
தல விருட்சம் : மருதமரம், கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
புராண பெயர் : திருவம்பர் மாகாளம், கோயில் திருமாகாளம்
ஊர் : திருமாகாளம்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்துக்கு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்துக்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்துக்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால், நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவன் புலையர் உருவில் நேரில் எழுந்தருளினார்.
நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்துகொண்டு அவர் வருவதைப் பார்த்த அந்தணர்கள், புலையர் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடிவிடுகின்றனர். தந்தைதான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாற நாயனார், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்.
இறைவனும் தனது புலையர் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மக நாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்து அருளினார். சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.
சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சி கொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.
அம்பர், அம்பாசுரன் ஆகிய அரக்கர்களை காளி கொன்ற பிறகு இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்த தலம். அம்பராசுரர்களை அழித்து காளி வந்து வழிபட்டதால் இத்தலம் ‘அம்பர் மாகாளம்’ என்று அழைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கு
முகவரி:
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்,
திருமாகாளம் – 609 503,
திருவாரூர் மாவட்டம்
:
+
அமைவிடம்:
மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம், மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.