·   ·  1260 posts
  •  ·  0 friends

அஞ்சா நெஞ்சன்

ஒரு காட்டில் காலபைரவி என்ற மந்திரக்கிழவி இருந்தாள். அவள் மிகவும் கொடூரமானவள். அக்காட்டு வழியே வரும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொன்று களிப்பவள். அவளது இருப்பிடம் ஒரு குகை. அதற்குள்தான் கொன்ற மனிதர்களின் எலும்புக் கூடுகளை நிறுத்தி வைத்து, அவற்றின் மத்தியில் தான் படுத்துத் தூங்குவாள்.

ஓராண்டிற்கு முன் அந்தக் காட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலய்யன் என்ற இளைஞன் அந்தக் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். காலபைரவி அவனைப் பிடித்துக் கொன்று, அவனது எலும்புக் கூட்டைத் தன் குகைக்குள் வைத்து விட்டாள். இதை அறிந்தபின் அக்கிராமத்தவர்கள் யாருமே அக்காட்டு வழியே செல்லவில்லை.

பாலய்யனுக்கு வீரையன் என்ற அண்ணன் இருந்தான். அவனை 'அஞ்சா நெஞ்சன்' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அவன் காட்டிலுள்ள காலபைரவியை ஒழித்து விடுவது என்ற தீர்மானத்தோடு அங்கே சென்றான். அப்போது அவள் விழுதுகளுள்ள ஆலமரத்தடியே உட்கார்ந்து கொண்டு யாராவது ஒரு மனிதன் அவ்வழியே வருவானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வீரையன் வருவதைக் கண்டதும் அவள் ஒரேயடியாக மகிழ்ந்து போனாள்.

வீரையன் காலபைரவியின் பக்கம் போய் நின்று, "என்ன பாட்டி! நலம்தானா?" என்று கேட்டான். மந்திரக்கிழவி அவனை விழுங்கி விடுபவள் போலப் பார்த்து, "நலமாக இருப்பதால்தானே இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன்? பேரப் பயலே! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டாள்.

அவனும், "பாட்டி! என் பெயர் வீரையன். என்னை ஊரார் 'அஞ்சா நெஞ்சன்' என்று கூப்பிடுகிறார்கள். நான் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் இருப்பதே இப்பெயர் வரக் காரணம். ஊரில் பல ஆசிரியர்களிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால், பயம் என்றால் என்ன என்று தான் தெரியவில்லை.

யாராவது என்னை பயமுறுத்தி அது என்ன என்று அறிய வைக்கிறார்களா என்று தான் அலைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னை பயமுறுத்துபவன் யாருமே தென்படவில்லை" என்றான்.

காலபைரவி பயங்கரமாகச் சிரிக்கவே, அவனோ, "பாட்டி! நீ என்னை பயமுறுத்தி மேலுலகத்திற்கு அனுப்பப் போகிறாய்? நான் என்னவோ இவ்வளவு நாட்களாக மந்திரக்கிழவி என்றால் பார்க்கவே பயங்கரமாக இருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். நீயோ மிக அழகாக இருக்கிறாய்" என்றான்.

அதைக் கேட்டு காலபைரவி உச்சி குளிர்ந்து போய், "நீ சொல்வது உண்மையா?" என்று கேட்டாள். வீரையனும், "நான் சொல்வதை நம்ப நீயே இந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்" என்று கூறித் தன் பையிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்துக் கொடுத்தான். அவளும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு, தான் பேரழகியே என்று எண்ணி மகிழ்ந்தாள்.

அப்போது வீரையன், "இது கிடக்கட்டும். முதலில் என்னை பயமுறுத்த முடியுமா பார்" என்று கூறினான். காலபைரவியும் "பொடிப்பயலே! என்னுடன் வா" என்று கூறி அவன்கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் குகைக்குள் சென்றாள். வீரையன் அங்கு பல எலும்புக் கூடுகளைப் பார்த்தான். அவற்றில் ஒன்றுதான் தன் தம்பியுடையது என்று நினைத்ததும் அவன் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது (நீர்ளதும்பியது).

அப்போது காலபைரவி, "பேரப் பயலே! இவர்களை நான் கத்தியால் குத்தியோ அல்லது விஷம் கொடுத்தோ கொல்லவில்லை. இவர்கள் என் பயங்கர உருவத்தைக் கண்டதுமே பயத்தால் இதயத்துடிப்பு நின்று இறந்து போனவர்கள். இதைத் தெரிந்து கொள்" என்றாள்.

அது கேட்டு வீரையன், "இவர்களெல்லாம் தொடை நடுங்கிகள் போல் தெரிகிறது. அதனால் தான் பயந்து உயிர் விட்டிருக்கிறார்கள். நான் அப்படிப்பட்டவனல்ல. என் இதயம் இரும்பு போன்றது" என்றான்.

காலபைரவியும், "பொடிப்பயலே! அவசரப்பட்டு உளறாதே" எனக் கூறி ஏதோ மந்திரத்தை உச்சரித்தாள். மறு நிமிடமே அவளது தலை புலியின் தலையாக மாறியது. உடல் ஒரு ராட்சசக் கழுகினுடையது போல ஆகியது. அது தன் கூர்மையான நகங்களால் வீரையனைப் பற்றிக் கொண்டு வானில் பறக்கலாயிற்று. சற்று நேரம் வரை அவ்வாறு பறந்து விட்டு கீழே இறங்கி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கவே, அது பழைய காலபைரவியாக ஆகிவிட்டது. வீரையனோ சற்றும் மனங்கலங்காமல் முன்போலவே இருந்தான்.

அதைக் கண்ட காலபைரவி ஆச்சரியப்பட்டு, "பயலே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? என் பயங்கர உருவைக் கண்டு நீ இறந்து போயிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்" என்றாள். வீரையனும், "உன் இந்தக் கோமாளி வேஷத்திற்கெல்லாம் நான் பயந்து விடுவேனா? ஏதோ சற்று நேரம் வானவீதியில் என்னுடன் உலா வந்தாய். அவ்வளவுதான்" என்று சிரித்துக் கொண்டே கூறினான். அது கேட்டு காலபைரவி கோபமும் ஆத்திரமும் கொண்டு, இன்னொரு மந்திரத்தை உச்சரித்தாள்.

அப்போது வீரையன், "பாட்டி! உனக்கு நிறைய மந்திரங்கள் தெரியும் போல் இருக்கிறதே. இம்முறை என்னை பயமுறுத்தி உன்னால் என்னை எலும்புக் கூடாக ஆக்க முடியாவிட்டால், எனக்கு நீ ஒரு மந்திரத்தைக் கற்றுத் தர வேண்டும். தெரிந்ததா?" என்றான். அவளும் "நீ மந்திரத்தைக் கற்றுக்கொள்ள இந்தத் தடவை நீ சாகாமல் இருக்கப் போகிறாய்? நீ உயிருடன் இருந்து விட்டால் கற்றுக் கொடுக்கிறேன்" என்று கேலியாகச் சிரித்தாள்.

இந்த முறை காலபைரவி ஒரு மனித எலும்புக் கூடாக மாறினாள். அதிலிருந்து பல விஷப்பாம்புகள் சீறிக்கொண்டு வெளியே வந்தன. அது கண்டு வீரையன் பலமாகச் சிரித்தான். அவன் இறக்காதது கண்டு காலபைரவி முன் போலா (முன்போல) ஆகி, "சரி, சொன்னபடி ஒரு மந்திரத்தை உனக்குக் கற்பிக்கிறேன்" என்றாள். வீரையனும், "பூ...! எதையும் தேளாக மாற்றும் இந்த உபயோகமற்ற மந்திரமா?" என்று கேட்டான். காலபைரவியும், "ஓகோ! உனக்கு சக்தி வாய்ந்த மந்திரத்தைக் கற்றுக்கொடுக்க நான் என்ன ஏமாந்த சோணகிரியா?" என்று கேட்டாள்.

வீரையனும் "நீ ஏமாற மாட்டாய் என்பது தெரியும். நீ இதையே கற்றுக் கொடு" என்றான். அவளும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்து, "நீ எந்த ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ பார்த்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதுவோ அல்லது அவனோ தேளாகி விடுவான்" என்றாள். வீரையனும் 'அப்படியா' என ஆச்சரியப்படுபவன் போல காலபைரவியைப் பார்த்தவாறே அந்த மந்திரத்தை உச்சரித்தான்.

மறு விநாடியே அவள் தேளாகி விட்டாள். வீரையன் சற்றும் தாமதிக்காமல் அந்தத் தேளைத் தன் காலால் மிதித்து நசுக்கிக் கொன்று விட்டான். காலபைரவி மாற்று மந்திரம் உச்சரிக்க நேரமில்லாமல் அவன் செயல்பட்டதால், அந்த மந்திரக்கிழவி துடிதுடித்து இறந்து போனாள்.

கிழவி இறந்ததும் அவளது குகையிலிருந்த மனித எலும்புக் கூடுகளெல்லாம் உயிருள்ள மனிதர்களாகின. அவர்கள் யாவரும் குகையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களில் வீரையனின் தம்பி பாலய்யனும் இருந்தான். வீரையன் அவனைக்கட்டித் தழுவியவாறே எல்லோரிடமும், "இனி உங்களுக்கு பயமே இல்லை. காலபைரவி இறந்து கீழே கிடப்பதைப் பார்த்து மகிழுங்கள்" என்றான்.

அவர்கள் ஆச்சரியத்துடன் மந்திரக்கிழவியின் உடலைப் பார்க்கவே, வீரையன் நடந்ததையெல்லாம் விவரித்துக் கூறினான். அப்போது பாலய்யன் எல்லோரிடமும், "இவன் என் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வீரையன்" எனவே யாவரும் "அஞ்சா நெஞ்சன் நீடுழி வாழ்க" என வாழ்த்தி வணங்கி விட்டுச் சென்றனர்.

  • 430
  • More
Comments (0)
Login or Join to comment.