ஆலிலை கிருஷ்ணர்
மார்க்கண்டேயர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார். அவர் இளம் வயதினர். பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடித்து, மரவுரி தரித்து, புலன்களை அடக்கி மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து கடும் தவம் மேற்கொண்டார். ஆறு மன்வந்திர காலம் இவ்வாறு தவம் செய்துவந்தார். ஏழாவது மன்வந்திரத்திலும் தனது தவத்தைத் தொடர்ந்தார். அப்போது இந்திரன் கவலை அடைந்தான். மார்க்கண்டேயர் தொடர்ந்து தவம் செய்துவந்தால் தனது இந்திரப்பதவி பறிபோய்விடும் என்று நினைத்தான். அழகிய தேவலோகப் பெண்களை மார்க்கண்டேயர் இருக்குமிடம் அனுப்பி, அவரை மயக்கி, அவரது தவத்தை கலைக்க முற்பட்டான்.
அப்பெண்கள் தமது இனிய கானத்தாலும், மயக்கும் நடனத்தாலும், வசீகர தோற்றத்தாலும் மார்க்கண்டேயரை தமது வலையில் வீழ்த்த முயன்றனர். ஆனால் மார்க்கண்டேயர் தனது கவனம் சிதறாமல் தொடர்ந்து தவம் செய்தார். தனது உடல்ஒளியினால் அப்பெண்களை சுட்டெரிக்க முயன்றார். அப்பெண்கள் இதை உணர்ந்து பயம்கொண்டு தேவலோகத்திற்கு ஓடிவிட்டனர்.
தம்மை தியானித்து இத்தனை காலம் தவம் செய்த மார்க்கண்டேயருக்கு அருள் பாலிக்கும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு காட்சியளித்தார். மார்க்கண்டேயர் மிக்க மகிழ்ந்து, அவருக்கு தக்க மரியாதை செய்து பூஜித்தார். ஸ்ரீமன் நாராயணன் மிக்க மகிழ்ச்சியடைந்து " மார்க்கண்டேயா ! உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் ! " என்று கூறினார்.மார்க்கண்டேயர் " பகவானே ! எனக்கு எந்தப் பொருளின்மீதும் ஆசையில்லை !எந்தப் பதவியும் எனக்கு வேண்டாம் !. நான் தங்களை தரிசித்துவிட்டேன் ! அதுவே போதும். ஆனால் தங்களுடைய மாயையை பார்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை எனக்கு காட்டுங்கள் ! " என்று கூறினார்.( மாயை என்பது விஷ்ணுவின் ஒரு உருவம்). அதைக்கேட்ட பகவான் "அப்படியே ஆகட்டும் !" என்று கூறிவிட்டு பத்ரிகாசிரமம் சென்றுவிட்டார். மார்க்கண்டேயரும் தனது ஆசிரமம் சென்றடைந்து பகவானை தியானித்துவந்தார்.
ஒருநாள் திடீரென்று பெரும் காற்று வீசத்தொடங்கியது. மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். நான்கு கடல்களும் பொங்கியெழுந்து உலகை மூழ்கடிக்கத் தொடங்கின. நீர்வாழ் விலங்கினங்களும், நிலம்வாழ் உயிரினங்களும் தவித்தன.
இதைக்கண்ட மார்க்கண்டேயர் வருத்தமடைந்தார். தனது ஜடைமுடியை விரித்துக்கொண்டு மூடன்போன்று பற்பல இடங்களில் அலைந்து திரிந்தார்.இறுதியில் மேடான ஒரு இடத்தில் ஆலமரம் ஒன்று இருப்பதைக் கண்டார்.அம்மரத்தின் அருகில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த ஓர் ஆலிலையில் குழந்தை ஒன்று படுத்திருப்பதைக் கண்டார். இருளைப் போக்கக்கூடிய ஒளி உடையதாய் அக்குழந்தை இருந்தது. அக்குழந்தை தாமரை மலர் போன்ற முகம் உடையது. சங்கு போன்ற கழுத்தினை உடையது. சுருண்ட தலைமுடி, மாதுளை பூக்களைப் போன்ற காதுகள், பவளம் போன்ற சிவந்த உதடுகளை உடையதாய் இருந்தது.
அந்த அழகிய குழந்தை தன் கைகளினால் கால் கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது. பலவித அணிகலன்களை அணிந்து திவ்ய ரூபத்துடன் காட்சியளித்த அக்குழந்தையைக் கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். "இதுபோன்ற குழந்தையை பார்த்ததில்லையே ! " என்று ஆனந்தமடைந்தார். மிகுந்த மகிழ்வுடன் அக்குழந்தையின் அருகில் சென்றார்.
அக்குழந்தையின் மூச்சுக்காற்றினால் இழுக்கப்பட்டு ஒரு கொசுவின் உருவில் மார்க்கண்டேயர் குழந்தையின் வாயில் நுழைந்தார். பின்னர் வயிற்றுப்பகுதிக்கு சென்றுவிட்டார். அக்குழந்தையின் வயிற்றில் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதைக் கண்டார். அங்கே ஆகாயம், பூமி, நட்சத்திரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள், பலவித உயிரினங்கள் இருப்பதைக் கண்டார் தனது ஆசிரமும் அக்குழந்தையின் வயிற்றுள் இருப்பதைக்கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். சிறிதுநேரத்தில் குழந்தையின் மூச்சுக்காற்றினால் வெளியே தள்ளப்பட்டு மார்க்கண்டேயர் பிரளய நீரில் வந்து விழுந்தார்.
நீரில் வந்து விழுந்தவுடன் ஆலிலையின்மேல் படுத்திருக்கும் வடபத்திரசாயியான அக்குழந்தைதையைப் பார்த்தார். அக்குழந்தையின்மேல் அன்பு பொங்கியது.அந்க் குழந்தையை தொட்டுத் தூக்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அக்கணமே குழந்தையாகப் படுத்திருந்த பகவான் மறைந்தார். அந்த. ஆலமரமும் மறைந்தது. பிரளயநீரையும் காணவில்லை.மார்க்கண்டேயர் முன்புபோல் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்ந்தார்.
.அப்போது மார்க்கண்டேயர் பகவான் நாராயணின் யோகமாயையினால் இத்தகைய தோற்றம் தென்பட்டது என்பதை உணர்ந்தார். தனது வேண்டுகோளை ஏற்று நாராயணன் தனது மாயாவினோதங்களைக் காட்டி மகிழ்வித்ததை எண்ணி வியந்தார். "பெருமாளே ! உம்முடைய மாயையைக்காண மகரிஷிகள்கூட விரும்புகிறார்கள். நீர் உம்மை அண்டியவர்களின் பயத்தைப் போக்குபவர் ! அப்படிப்பட்ட உன் பாதகமலங்களை சரணடைகிறேன் ! " என்றுகூறித் துதித்தார்.
இதுதான் ஆலிலை கிருஷ்ணனின் (விஷ்ணுவின்) வரலாறு. இவர் மாயையை காட்டியதால் இவருக்கு மாயோன், மாயவன் என்ற பெயர்களும் உண்டு. (மார்க்கண்டேயர் சிவபெருமானை துதித்து தவம் புரிந்து " என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய் ! " என்று வரம் பெற்றது புராணங்களில் கூறப்பட்டுள்ளது).