- · 0 friends
அன்பு காட்டிய முதலாளி
ஒரு ஊரில் செல்வம் என்று ஒரு முதலாளி இருந்தார். அவருக்கு சிறிய இரும்பு பட்டறை இருந்தது. அங்கு பத்து தொழிலாளிகள் வேலை செய்தார்கள். செல்வம் மற்ற முதலாளிகளை போல் இல்லை. காலையில் பட்டறைக்கு வந்ததும், ஒவ்வொரு தொழிலாளியிடமும் சென்று, சாப்பிட்டாயா, வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்கள், பிள்ளைகள் படிப்பு எப்படி போகிறது என்று அன்பாக விசாரிப்பார். கூலியை என்றும் தாமதிக்க மாட்டார். யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால், தானே முன்னால் நின்று மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்.
அங்கு வேலை செய்த கண்ணன் என்ற தொழிலாளிக்கு ஒரு நாள் பெரிய சோதனை வந்தது. அவருடைய மனைவிக்கு திடீரென உடல் நலம் குன்றியது. மருத்துவமனையில் சேர்க்க பணம் தேவைப்பட்டது. கண்ணன் கண் கலங்கி முதலாளியிடம் வந்து நின்றார். செல்வம் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. தன் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து, நீ முதலில் மருத்துவமனைக்கு போ, வேலையை பற்றி கவலைப்படாதே, உன் குடும்பம் என் குடும்பம் போலத்தான் என்று சொன்னார். அதோடு நிற்கவில்லை. தினமும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
மனைவி குணமாகி வீடு திரும்பியதும், கண்ணன் கண்ணீரோடு சொன்னார், முதலாளி, நீங்கள் கொடுத்தது பணம் மட்டும் இல்லை, எனக்கு தைரியம் கொடுத்தீர்கள் என்று. அன்று முதல் அந்த பட்டறையில் உள்ள அனைத்து தொழிலாளிகளும், இது எங்கள் கடை என்ற உணர்வோடு வேலை செய்தார்கள். பட்டறை நல்ல வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் இயந்திரங்கள் இல்லை, முதலாளி காட்டிய அன்புதான்.
நண்பர்களே, தொழிலாளி என்பவர் வெறும் கூலிக்கு வேலை செய்பவர் இல்லை. அவர் அந்த நிறுவனத்தின் உயிர். முதலாளி காட்டும் ஒரு சிறு அக்கறையும், ஒரு அன்பான சொல்லும், தொழிலாளியின் மனதில் பெரிய நம்பிக்கையை விதைக்கும். அன்பு இருக்கும் இடத்தில் தான் உண்மையான உழைப்பும், வளர்ச்சியும் பிறக்கும்.