
தோற்றத்திற்கு தந்த மரியாதை
ஒருநாள் முல்லா நசுரூதின் அவர்கள் ஒரு ஆடம்பர வசதியுள்ள மனிதர்கள் மட்டுமே செல்ல முடிந்த ஒரு ஹோட்டலுக்கு உணவு உண்ண செல்கிறார். முல்லா அவர்கள் எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்புவார். எளிய ஆடைகளை மட்டுமே அணிவார். அவர் ஆடம்பரமான ஒரு டேபிளின் அருகிலுள்ள நாற்காலியில் போய் அமர்கிறார். அதற்குரிய சர்வர் அவரிடம் மெனு கேட்க வரும் போது, முல்லா அவர்களின் சாதாரண தோற்றத்தை பார்த்து, " இவன் தோற்றத்தை பார்த்தாலே நமக்கு ஒரு டிப்ஸ்ஸும் தரப் போவதில்லை ", என்று மனதுக்குள் எண்ணி, முல்லா அவர்களை ஏளனப் பார்வையில் பார்த்து, " என்னா வேணும் ", என்று மரியாதை குறைவாக பேசி மிகவும் சூடாக நடந்து கொள்கிறான். அவர் கேட்ட உணவை தாமதமாக்கி அனாவசியமாக மேஜையில் வைக்கிறான். முல்லா அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சாப்பிடுகிறார்.
பில் வருகிறது. தன் அழுக்கு சுருக்குப் பையில் இருந்து தேடி 100 வெள்ளி காசுகளை அனாவசியமாக வைத்து விட்டு சர்வரை பொருட்படுத்தாமல் வெளியே செல்கிறார். " 100 வெள்ளி காசுகளா! அவன் வாழ்நாளில் எந்த வசதியானவரும் அளித்திடாத டிப்ஸ் ஆச்சே", என்று விக்கித்து போகிறான். "இந்த மனிதரிடம் இவ்வளவு கீழ் தரமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது" என்று கூனிக் குறுகி தலை குனிகிறான்.
சில மாதங்கள் சென்றன. முல்லா அவர்கள் மறுபடியும் அதே ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறார். அதுவும் அதே டேபபிளுக்கு. நம்ம பழைய ஆள் தான் இப்போதும் சர்வர். நம்ம சர்வருக்கு தலை கால் புரியவில்லை. முல்லா அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். " இன்றைக்கு நல்ல வேட்டை தான். நல்லா கவனிச்சா இன்றைக்கு எப்படியும் குறைந்தது 200 பவுன் காசுகள் கிடைக்கும்", என்று மனதுக்குள் சர்வர் நினைத்து விழுந்து விழுந்து உபசரிக்கிறான். பில் வந்தது. சர்வர் டிப்ஸ் தட்டில் பார்க்கிறான். முல்லா அவர்கள் வெறும் 1 வெள்ளி காசை வைத்து விட்டு எழுந்திருக்கிறார். சர்வருக்கு ஷாக். ஒன்னும் புரியவில்லை. " என்னடா, விழுந்து விழுந்து கவனித்தேன். வெறும் 1 வெள்ளி காசு தானா? " என்று மனதுக்குள் வெம்பினான். முல்லாவிடமே இதுபற்றி கேட்கலாம் என்று கேட்டே விட்டான். " என்ன ஐயா, போன தடவை தங்களை உதாசீனப் படுத்தி சரியாக கவனிக்கவில்லை. அப்போது 100 வெள்ளி காசுகள். இப்போது விழுந்து விழுந்து கவனித்தேன். வெறும் 1 வெள்ளி காசு தானா? என்று கேட்கிறான்.
இதற்கு முல்லா கூறுகிறார். "நான் போன தடவை 100 வெள்ளி காசுகள் தந்தது இப்போது இன்று நீ தந்த தடபுடல் கவனிப்புக்கு. இன்றைக்கு நான் தந்த 1 வெள்ளி காசு போன தடவை எனக்கு அன்று நீ செய்த உதாசீன நடத்தைக்கு", என்று சொல்லியவாறு நடக்கிறார். சர்வருக்கு நல்ல பாடம் தான்.