வெட்டிவேரின் மருத்துவ குணங்கள்
வெட்டி வேர் புல் இனத்தைச் சார்ந்தது. அனைத்து மண்ணிலும் வளரும்.
பெரும்பாலும் மணற் பாங்கான இடங்கள், ஆற்றுப் படுகையில் சிறப்பாக வளரும்.
நாணல் மற்றும் தர்ப்பைப் புற்கள் போல் வளரும். கொத்து கொத்தாக இருக்கும்.
பெயர்க் காரணம்::
இதன் வேரை வெட்டி எடுத்த பின், தாவரத்தின் வேர் மற்றும் புல் இரண்டையும் தனித்தனியாக வெட்டி எடுக்க வேண்டும். பிறகு நடுவில் உள்ள தண்டை மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடுவதால் வெட்டி வேர் எனப்படுகிறது.
வேர் கருப்பு நிறத்தில் வாசனையுடன் இருக்கும்.ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ ஊதா நிறம் உடையது. வேர் 2மீ முதல் 4மீ ஆழம் வரை செல்லும்.4முதல் 5 அடி உயரம் வரை வளரும்.
லெமன் கிராஸ்,பாம்பரோஸா புல் போன்று வளரும்.
மண் அரிப்பைத் தடுக்கும்.
மாடுகளுக்கு இதன் புல் உணவாகிறது.
மருத்துவ பயன்கள்:
அதிக நறுமணம் உடையது வெட்டி வேர்.இதை சுவாசிப்பதால் தலைவலி குணமாகும்.உடல் புத்துணர்ச்சி பெறும்.
இதிலிருந்து எடுக்கப்பட்டத் தைலம் அதிக வாசனை யுடன் இருப்பதால், சிறந்த மணமூட்டியாகத் தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
காய்ச்சல் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நா வறட்சி, தாகம் நீங்குவதுடன் , வாந்தி ,பேதிக்கு நல்ல மருந்தாகும்.
மண் பானைத் தண்ணீரில் வெட்டி வேரை போட்டு ஊற வைக்க, நீருக்குச் சுவையும், மணமும், பலன்களும் பல மடங்கு கிடைக்கும்.
காய்ச்சல்:
வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடி செய்து 200மி.லி.முதல் 400மி.லி.அளவு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.ஊறல் நீரை 30முதல்65மி.லி. அளவு வீதம் அருந்தி வர காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படும்.
விசிறி:
வெட்டி வேர் கொண்டு விசிறிகள் செய்யப் படுகிறது. இந்த விசிறி மூலம் வீசி வர உடல் எரிச்சல்,நா வறட்சி மற்றும் தாகம் தீர்க்கும்.
தட்டி::
விசிறி மட்டும் அல்லாமல் வீட்டின் ஜன்னல்களுக்குப் போடப்படும் தட்டிகளும் வெட்டி வேரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவற்றை வீட்டின் ஜன்னல்களுக்குக் கட்டி வர அறையின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியைத் தருகிறது.
கோடைக் கொடை:
கோடை காலத்தில் ஏற்படும் தேக எரிச்சல், கண் எரிச்சல்,வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்கள் குணமாக வெட்டி வேர் உதவுகிறது.
வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி பொடி செய்து, அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு எடுத்து, வெந்நீரில் அருந்தி வர குணம் கிடைக்கும்..
நன்றாக காய்ச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதைகளுடன் வெட்டி வேரை 2பிடி சேர்த்துஒரு மண் பாண்டத்தில் போட்டு, வெய்யில் நேரத்தில் குடித்தால், சூட்டினால் ஏற்படும் தேக எரிச்சல்,கழுத்து வலி, கோடைக் கொப்புளங்கள், சொட்டு சொட்டாக இறங்கும் சிறுநீர் போன்ற உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.
பருக்கள், தழும்புகள்::
பருக்கள் அடிக்கடி முகம் முழுவதும் தோன்றி அவதிப்படுபவர்களுக்கு வெட்டி வேர் சிறந்த மருந்தாகும்.
சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் ஒரு டீஸ்பூன் மற்றும் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்று, இரண்டையும் முன்னாள் இரவு கொதிநீரில் ஊறவைத்து அரைத்த விழுதை பருக்கள் மீது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசி வந்தால், பருக்கள் உதிர்ந்து,வடுவும் தெரியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
பருக்களால் ஏற்பட்டத் தழும்புகளால் சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும்.அதற்கு, ஒரு இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்த வெட்டி வேர் துண்டுகளை, மறுநாள் வெட்டி வேரையும், தண்ணீரையும் தனித் தனியே பிரிக்க வேண்டும்.
மேலும், வெட்டி வேர் போட்டு கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.பின் முகத்தை தன் துடைத்தால், வெட்டி வேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியால் அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.
வாரம் இருமுறை இப்படிச் செய்தால் தழும்புகள் மறைந்து விடும்.
ஸ்பெஷல் பேஸ் பேக்:
வெட்டி வேர்,ரோஜா மொட்டு, மகிழம் பூ, செண்பகப் பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.(எவ்வளவு அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும்), இதை நன்றாக சலித்து,நைசான பவுடரை மட்டும் நீரில் குழைத்து முகத்தில் பூசி, பிறகு கழுவ வேண்டும். வெட்டி வேர் எண்ணெய் பசையை எடுக்கும்.சம்பங்கி விதை முகத்திற்கு புத்துணர்ச்சி தரும்.ரோஜா மொட்டு சோர்வைப் போக்கி நிறத்தைத் தரும்.மகிழம் பூவும், செண்பகப் பூவும் வியர்வை நாற்றம் போக்கி, வாசனையைத் தருகிறது.
சருமம் மிருதுவாக:
சிலருக்குத் தோள் பட்டையிலும்,முதுகுப் புறத்திலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.இதற்குத் தீர்வு வெட்டி வேரிலுள்ளது.
பச்சை பயறு 100கிராம்,சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர்-50கிராம் இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து, அந்த பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்,சிறு கட்டிகள், வரிகள் ஓடிப் போகும்.சருமம் மிருதுவாகும்.
கூந்தல் மணக்க::
வெட்டி வேர் 100கிராம், வெந்தயம் 100கிராம் இரண்டையும் சீயக்காய் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் இந்தப் பவுடரை பயன்படுத்தி தலைக்குக் குளித்தால், முகத்தில் எண்ணெய் வழியாது.அதோடு கூந்தலும் மணக்கும்.
சர்பத்-சம்மர் கூலர்:
வெட்டி வேரை கழுவி சுத்தம் செய்து 3நாட்கள் குடிநீரில் ஊறவைத்து வடிகட்ட வேண்டும். ஊறவைத்த வேரை வெயிலில் காய வைத்துமீண்டும் அந்த வேரைப் பயன் படுத்தி இதேபோல் மூன்று முறை பானம் தயாரிக்க முடியும்.
இப் பானம் தாகத்தைத் தணிப்பதோடு, நீரேற்றமாக வைக்கவும், ஆரோக்கியமான உணவாகும்.
செல் பிரிவு:
வெட்டி வேரில் 300க்கு மேற்பட்ட என்சைம் செயல் பாட்டிற்குக் காரணமான துத்தநாகச் சத்து உள்ளது.இது இயற்கை பாதுகாப்பு அமைப்பை ஆதரிக்கிறது.செல் பிரிவு, செல் வளர்ச்சி மற்றும் காயங்கள் குணப்படுத்த உதவுகிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இரும்பு, மாங்கனீசு மற்றும் பி 6 வைட்டமின்கள் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
குடிக்கும் நீரில் வெட்டி வேர் போட்டுக் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
இந்த கொரானாக் காலத்திலும் ஒரு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
இத்தகைய சிறப்புகள் பெற்றிருப்பதாலே தான் இது "வெற்றி வேர்"என்றும் அழைக்கப்படுகிறது.