உக்கிராணம் காலி (திருவண்ணாமலை ரமணர் ஆசிரிமத்தில் நடந்த சம்பவம்)
ஒருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம்,'இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி.
நாளை காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது.
சிலர் ஊருக்கு கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்த போது பகவான் காதுக்கு விஷயம் சென்றது.
பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
இந்த மலை இருக்கு.
பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ" என்று கூறி மௌனமானார்.
வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார்.
"என்ன இருக்கு?"என்று கேட்டார்.
'கொஞ்சம் நொய் குருணை தான் இருக்கு'என்றனர்.
"சரி எடுத்துக்கொண்டு வா!"
என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார்.
காலை 5:30 மணி,கைப்பிடி குருணையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு பாத்திரத்தில் போட்டுக் கழுவினார்.
உலை கொதித்ததும் அரிசியைப் போட்டார்.
அருகில் இருந்த அண்ணாமலை சுவாமி,'என் ஒருவனுக்கே இது பத்தாது.
எப்படி இத்தனை பேர் சாப்பிடறது இதை!' என்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அரிசி பொங்கி வந்த போது ஒரு பக்தர் தரிசனத்துக்கு 2 லிட்டர் பாலுடன் வந்தார்.
பகவான் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாலையும், அரிசியையும் சேர்த்து வேகவைத்தார்.
சில நிமிடங்களில் ஒரு பக்தர் கற்கண்டு, உலர் திராட்சையுடன் தரிசிக்க வந்தார்.
பகவான் அதைச் சுத்தம் செய்து அதையும் பாத்திரத்தில் போட்டார்.
ஆறரை மணி அளவில் அது முடிவுக்கு வந்த போது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் சிலர் வந்தனர்.
அவர்கள் பெரிய பானையில் இட்லி, வடை,சட்னி,மலைவாழைப்பழம்,
தொன்னை முதலியன கொண்டு வந்திருந்தார்கள்.
வழக்கமாக காலை 7 மணிக்கு பகவான் குளித்துவிட்டு வந்து, அனைவரும் அமர்ந்து அருமையான உணவு உண்டனர்.
பகவான் தயாரித்த பாயாசம் அந்தத் தொன்னையில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.