கடவுளிடம் கேட்ட வரம்
கடும் தவத்துக்குப் பிறகு கடவுள் காட்சி தந்தார்.
“இறைவா! நான் இழந்தவை அனைத்தையும் எனக்குத் திருப்பிக் கொடு! என்றேன்.
“இழந்தவை எவை என்று சொல்லு பார்க்கலாம்.....” என்றார் கடவுள்.
“காலமாற்றத்தில் இளமையை இழந்தேன்.கோலம் மாறி அழகை இழந்தேன். வயது அதிகமாக உடல் நலத்தை இழந்தேன்.இதுபோல் இன்னும் எத்தனையோ! அத்தனையும் திருப்பிக் கொடு!” என்றேன்.
சிரித்தவாறே, “கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பலனாய் வறுமையை இழந்தாய். உறவுகள் வந்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதுபோல இழந்தவையும் பல உண்டு.இவைகளையும் திருப்பித் தரட்டுமா-” என்றார் கடவுள்.
பதறிப்போய், “வேண்டாம் ஸ்வாமி!” என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தபோது கடவுளைக் காணோம்.