
கம்பீர நடை (படித்ததில் ரசித்தது)
70 வயது முதியவர் அவர்..
கடந்த 2019 ஒரு நாள் அதிகாலை மதுரையில் இருந்து எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது இவரைப் பார்த்தேன்.. காக்கி நிற டவுசர் தெரிய பழுப்பேறிய அழுக்கு வேட்டி.. கரும்பச்சை நிறத்தில் சட்டை தோளில் பழுப்பேறிய வெண்ணிறத் துண்டு.. மூக்குக் கண்ணாடியின் பக்கவாட்டு தண்டுகள் உடைந்ததால் அதற்கு பதில் வெள்ளை கயிறு கட்டி காதில் மாட்டியிருந்தார். முகத்தில் சோர்வும் நடையில் தளர்வும் இருந்தது... என் மனைவி தான் சொன்னார், "பாவங்க அந்த தாத்தா ஒரு காபி வாங்கித்தரலாம் இல்லாட்டி காலை உணவுக்குப் பணம் தரலாம்" என்றார். நானும் அவரை அணுகி "ஐயா உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்.?" எனக் கேட்க திடுக்கிட்டு என்னைப் பார்த்தவர், "ஏன் தம்பி நான் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கலியே" என்றார்.
நானும் "அதில்லிங்க உங்களைப் பார்க்க பசியா இருக்கிற மாதிரியே இருந்தது.. அதான் கேட்டேன்" என்றவுடன். அவர் சிரித்துக் கொண்டே அவர் பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார். நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் தாள்களாக எப்படியும் 3000 ரூபாயாவது இருக்கும்.. "தம்பி நான் பிச்சைக்காரன் அல்ல.. உங்க அன்புக்கு நன்றி" என்றபடியே.. அங்கு இருந்த ஒரு டெலிபோன் ஜங்ஷன் பாக்ஸின் பின்புறம் இருந்து சுருட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாக்கினை எடுத்தார். குப்பையில் கிடைக்கும் பழைய குஜிரி பொருட்கள் அள்ளுவது அவரது தொழில் என்பது இப்போது புரிந்தது. "நான் பிச்சை எடுக்கலை தம்பி, தினமும் உழைக்கிறேன், வர்ற பணத்தை வயதான என் மனைவி மருத்துவ செலவுக்கு கொடுக்குறேன். நேத்து என் வேலை முடிய நேரமானதால்
கடைசி ரயிலை விட்டுட்டேன் அதான் ஸ்டேஷனிலேயே படுத்துட்டேன்.." என்றவர் அருகிலிருந்த ஒரு சின்ன இட்லிகடையில் 200 ரூபாயை எண்ணிக் கொடுத்து 5 இட்லி பொட்டலங்கள் வாங்கினார். இரண்டு பொட்டலங்களை அவரது சாக்கு பக்கத்தில் வைத்துவிட்டு மீதி மூன்று பொட்டலங்களோடு தம்பி "ஒரு நிமிசம் என் கூட வாங்க.." என்றவர் அருகிலிருக்கும் சிறிய சந்திற்குள் நுழைந்தார் பின் தொடர்ந்தேன். மூடப்பட்ட கடைகளின் வாசலில் சிலர் படுத்து இருந்தார்கள். அவர்கள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டோர் என பார்த்ததும் தெரிந்தது. அவர்களை எழுப்பி இட்லி பொட்டலங்களை கொடுத்துவிட்டு அருகில் இருந்த பெட்டிக்கடையில் தண்ணீர் பாக்கெட்டும் வாங்கித்தந்தார். என்னிடம் திரும்பி தம்பி "தனக்கு பசிக்குதுன்னு பிச்சை கூட கேட்க தெரியாத இவங்களுக்கு என்னால எப்ப எப்ப எல்லாம் முடியுமோ அப்ப உதவி செய்யுறேன்.. முடிஞ்சா நீங்க இவங்களுக்கு வாங்கி உங்க கையால கொடுங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லுங்க.. அதுக்கு தான் உங்களை இங்க கூட்டிகிட்டு வந்தேன். என்கிட்ட சாப்பாடு வேணுமான்னு கேட்டதுக்கு நன்றி, நான் வீட்டுக்கு போயி மனைவிகிட்ட சாப்பாடை கொடுத்துட்டு மறுபடி வேலைக்கு போகணும் வரட்டுமா தம்பி.." என்றவர் தன் தளர்நடையை தொடர்ந்தார்.. ஆனால் இப்போது எனக்கது கம்பீர நடையாக தோன்றியது..