
தமிழ்த்தென்றல் திரு. வி. க.
எங்கும் எதிலும் தமிழென வாழ்ந்தவர். தனது எளிய தமிழால் அனைவரையும் கவர்ந்தவர். இவரது நடையின் காரணத்தால் இவருக்கு தமிழ்த்தென்றல் என்ற சிறப்பு பெயர் வந்தது. முத்தமிழ்க் கடல்தமிழ்த் தென்றல், பெண்ணுரிமைப் போராளி மத்திய தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர் தந்தை, அரசியல் அறிஞர் தலைசிறந்த பேச்சாளர்எழுத்தாளர், சமரச சன்மார்க்க அருளாளர், பொதுவுடைமை சிற்பி என இவரின் பரிமாணங்கள் பல உள்ளன.
தாய்மொழியாம் தமிழில் பேசுவதும் எழுதுவதும் இழுக்கு இழிவு அயல் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவதே அழகு சிறப்பு என்று எண்ணித் தமிழர் வாழ்ந்த காலத்தே வாழ்ந்தவர் திரு.வி.க.எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழைத் தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பிய பெருமை தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களையே சாரும்.
இந்தி மொழியை எதிர்த்தார். பிறமொழி கலப்பற்ற தனித்தமிழை போற்றினார். செந்தமிழில் அவர் பேசாத பொருள் இல்லை,எழுதாத எழுத்தில்லை சிந்திக்காத சிந்தனையில்லை, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் தன் வாழ்வின் பேச்சும் மூச்சும் தமிழ் தன் இதயத்துடிப்பெல்லாம் தமிழ் தமிழென்றே வாழ்ந்தவர்.
எல்லார்க்கும் எழுத்துநடை வேறு, பேச்சுநடை வேறு. இந்த இருவேறு நடையையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடை படைத்தவர். வாழ்வையே பேச்சும் எழுத்துமாக ஆக்கிக் கொண்டவர் இவர். இதனால்தான் படித்த அறிவாளிகளும் ஏடறியாத் தொழிலாளிகளும் இவரால் ஒருசேரக் கவரப்பட்டனர். அடிக்கன்று வாழையாகத் தோன்றிய கல்கியும் மு.வரதராசனாரும் இவருக்கு வாரிசுகளாவர். அதனால்தான் கல்யாண சுந்தரனாரின் முதல் ஈரெழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் கல்+கி = கல்கி என வைத்துக் கொண்டார் இரா.கிருட்டிணமூர்த்தி(கல்கி). கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் 'திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,' என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.
"தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே" என தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். பிறமொழி கலைச்சொற்களை தமிழாக்க வேண்டும் என்பது இவரின் அவா.
இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கியவர்.