·   ·  485 posts
  •  ·  0 friends

இதெல்லாம் ஒரு Business Trick சார்.....

பேருந்து நிலையத்தில் ஒரு இளைஞன் ஆப்பிள் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்யகூடியவன். அவன் கூடையில் இருக்கக்கூடிய ஆப்பிள்களும் காஷ்மீர் ஆப்பிள்களைப் போல பளபளவென்று இருக்கும். அது மட்டுமல்லாது மிகவும் புதிதாகக் காணப்படும்.

அவன் விற்பனை செய்வதற்காக பேருந்தில் ஏறி ஆப்பிள் துண்டுகளைப் பயணிகளுக்கு சாப்பிட கொடுத்தான். அந்த ஆப்பிள்களும் மிகவும் சுவையாக இருந்தது. அதன்பிறகு "ஆப்பிள் கிலோ 200 ரூபாய்" என்று கூவி கூவி விற்க ஆரம்பித்தான்.

சிலபேர் "விலை ரொம்ப அதிகம்" என்றார்கள்.

சில பேர் "தம்பி..! 150 ரூபாய்க்குத் தரியா?" என்று கேட்டார்கள்.

ஆனால், அந்த பையன் "அதெல்லாம் முடியாது. ஒரே விலை. 200 ரூபாய்" என்று அடாவடியாக இருந்தான்.

சில பேர் "தம்பி.. அட்லீஸ்ட் 180 ரூபாய்க்காவது விலையைக் குறைத்துக் கொடுப்பா" என்று கேட்டுப் பார்த்தார்கள்.

"முடியவே முடியாது.. கிலோ 200 ரூபாய்" என்றான் அந்த பையன்.

எல்லோருமே விலை அதிகம் என்று வாங்க யோசித்தார்கள்.

அவன் பேருந்தை விட்டு கீழே இறங்கிவிட்டான். அவன் இறங்கியதும் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஆப்பிள் கூடையுடன் அந்த பேருந்தில் ஏறினார். அவர் கூடையில் ஒரு சில நல்ல ஆப்பிள்களும், ஒரு சில சுமாரான ஆப்பிள்களும் இருந்தன.

அந்த பெரியவர் "கிலோ 150 ரூபாய்.. கிலோ 150 ரூபாய்" என்று கூவி கூவி விற்பனை செய்யத் தொடங்கினார்.

உடனே அந்த பேருந்தில் இருந்த நிறைய பேர் அவரிடம் ஆப்பிள் வாங்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அந்த பேருந்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் வியாபாரம் பார்த்தார் அந்த பெரியவர்.

அந்த பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்த பெரியவர் "அந்த இளைஞன் எங்கே?" என்று குறுகுறுவென்றுத் தேடினார்.

அந்த இளைஞனும் வழக்கம்போல இன்னொரு பேருந்தில் "கிலோ 200 ரூபாய். கிலோ 200 ரூபாய்" என்று கூவிக் கொண்டிருந்தான். அவன் அந்த பேருந்தைவிட்டு இறங்கியதும் அந்த பெரியவன் அந்த பேருந்தில் ஏறி "கிலோ 150 ரூபாய்.. கிலோ 150 ரூபாய்.." என்று கூவி விற்பனை செய்யத் தொடங்கினார்.

இதனையெல்லாம் பேருந்து நிலையத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த நடத்துனர் ஒருவர் அந்த இளைஞனை அழைத்தார்.

"தம்பி.. அந்த பெரியவன் கிலோ 150 ரூபாய் என்று தானே வியாபாரம் செய்கிறார். அவருக்கு நன்றாக வியாபாரம் நடக்குதுல. நீயும் அந்த பெரியவர் மாதிரி கிலோ 150 ரூபாய் என்று விற்பனை செய்தால் உனக்கும் நன்றாக வியாபாரம் நடக்கும்ல.. அட்லீஸ்ட் 180 ரூபாய் என்று கேட்டவர்களுக்காவது கொடுக்கலாம்ல.. இப்டி ஒரே ரேட்.. 200 ரூபாய் என்று கொடுத்தால் எப்டிப்பா வியாபாரம் நடக்கும். கொஞ்சம் விலையைக் குறைத்துக் கொடுக்கனும். அது தான் வியாபாரம்" என்று சொன்னார்.

உடனே அந்த பையன் சொன்னான்.

"சார்.. இந்த மக்கள் எப்பொழுதுமே இப்படி தான் சார். சூப்பர் மார்க்கெட் நிலையங்களில் எல்லாம் போட்டிருக்குற விலையை அப்டியே பேரம் பேசாம வாங்கிட்டுப் போய்டுறாங்க.. ஆனால், எங்களைப் போன்று ரோட்டோரமாக வியாபாரம் பண்ற காய்கறிக்காரர்கள், பழக்காரர்கள் என்று தின வியாபாரம் செய்யக்கூடிய கூலிகளிடம் தான் பேரம் பேசுவார்கள். எங்ககிட்ட 10 ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் அவங்களுக்கு திருப்தியே கிடைக்கும் போல.. என்ன ஜனங்களோ சார். எப்டியோ, நான் 200 ரூபாய்க்கு விற்பதால், அந்த பெரியவர்கிட்ட பேரம் பேசாம வாங்குறாங்களே.. 150 ரூபாய் மதிப்புள்ள பழத்திற்கு 130 என்று பேரம் பேசாமல் வாங்குறாங்களே. அது வரைக்கும் சந்தோஷம் சார்" என்று சொன்னான் அந்த இளைஞன்.

"அதெல்லாம் சரிப்பா... ஆனால், அவர் கிலோ 150 ரூபாய் என்று விற்பதால், உனக்கு வியாபாரம் ஆக மாட்டேங்குதே.." என்று ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார் அந்த நடத்துனர்.

"சார்.. எனக்கு வியாபாரம் நடந்தா என்ன.. அவருக்கு வியாபாரம் நடந்தா என்ன.. அவர் என் அப்பா தான் சார். இதெல்லாம் ஒரு Business Trick சார்.." என்று சொல்லிவிட்டு அடுத்த பேருந்தை நோக்கி நடந்தான்..

அந்த பையனுடைய மாத்தி யோசிக்கும் திறனை பார்த்தீங்களா..! நீங்களும் உங்கள் துறையில் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்று வித்தியாசமாக யோசித்துக் கொண்டே இருங்கள்.. வெற்றி உங்களுக்குத்தான்...!!

  • 870
  • More
Comments (0)
Login or Join to comment.