
இறைவன் ஏங்குவது எதற்காக தெரியுமா? (குட்டிக்கதை)
ஒரு சிறிய நகரத்தில் கசாப்புக் கடைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெரும் பக்தர். அவர் தன் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே தான் இருந்தார். காலப்போக்கில் விலங்குகளைக் கொல்வது அவருக்குக் கடினமாக இருந்ததால் கொல்வதை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் தன் தொழிலைத் தொடர வேண்டி இருந்தது. ஏனெனில் வாழ வேறு வழி இல்லை. அதனால் அவர் மாமிசத்தை விலைக்கு வாங்கி சிறிது இலாபம் வைத்து விற்றார். மாமிசத்தை எடை போட அவர் ஒரு கல்லைப் பயன்படுத்தினார். அது ஒரு சாளக்கிராமக் கல். ஆனால் அதன் புனிதம் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. அந்தக் கல் தன்னிடம் எப்படி வந்தது என்று கூட அவருக்கு நினைவில்லை. அவர் நீண்ட நாளாக அதைப் பயன்படுத்தி வந்தார்.
ஒரு நாள் அந்தணர் ஒருவர் கடை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். கசாப்புக் கடைக்காரர் தராசில் எடைபோட சாளக்கிராமத்தைப் பயன்படுத்துவதைக் கண்டார். அந்தணர் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தது இயற்கை தானே! அவர் கல்லைக் கூர்ந்து கவனிக்க விரும்பினார். எனவே அதை நன்கு கழுவித் தன்னிடம் கொடுக்கும்படிக் கசாப்புக் கடைக்காரரிடம் கூறினார். அது சாளக்கிராமம் தான் என்று உறுதி செய்து கொண்டார். "அந்தப் புனிதக் கல்லை எடை போட ஏன் பயன்படுத்துகின்றீர்கள்?" என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் களங்கமற்றவர். "சாளக்கிராமம் பற்றியோ, அதன் புனிதம் பற்றியோ தனக்கு ஒன்றும் தெரியாது" என்று பதில் சொன்னார். உடனே அந்தணர் "சாளக்கிராமம் புனிதமான ஒன்று. மலர்கள், சந்தனம் போன்றவற்றைக் கொண்டு வழிபட வேண்டிய ஒன்று" என்று அவருக்கு விளக்கினார். தன் பூஜை அறையில் மற்ற தெய்வங்களுடன் சாளக்கிராமத்தை வைத்து வழிபட விரும்பினார். அதைத் தன்னிடம் தரும்படிக் கேட்டார். கசாப்புக் கடைக்காரரும் உடனடியாக அதற்கு ஒப்புக் கொண்டார்.
அந்தணர் அதைத் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார். இறைவனின் மற்ற உருவங்களுடன் பூஜை அறையில் வைத்து விஸ்தாரமான சடங்குகளுடன் வழக்கம் போல நைவேத்தியம் செய்து வழிபட்டார். ஆனால் சாளக்கிராமத்தில் இருந்த தேவதை இந்த மாற்றத்தை விரும்பவில்லை. கசாப்புக் கடைக்காரர் அதை அன்புடனும், பக்தியுடனும் கையாண்டு வந்தார். ஆனால் அந்தணரின் வீட்டில் அத்தகைய உணர்வு இல்லை. அந்த அந்தணரின் அன்பில்லாத வழிபாட்டையும், உறவையும் அதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே ஒரு நாள் சாளக்கிராம தேவதை அவர் கனவில் தோன்றியது."என்னை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? கசாப்புக் கடைக்காரர் உண்மையான பக்தர். நான் அவருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் எப்பொழுதும் என் புனித நாமங்களைப் பாடிக் கொண்டிருந்தார். அவ்வப்பொழுது தன் கரங்களாலேயே தராசில் என்னை மெதுவாக வைப்பார். ஓ, அவருடைய கைகள் எத்தனை இதமானவை! அன்பு நிறைந்தவை ! அவர் தொடுவது சுகமாகத் தழுவுவது போல இருக்கும். அவர் இதயம் பக்தியால் நிறைந்திருக்கின்றது. அவர் வாடிக்கையாளர்களுடன் பெரும்பாலும் என் புகழைத் தான் பேசிக் கொண்டிருப்பார். நீ எனக்கு நிறைய நைவேத்தியம் செய்கின்றாய். விஸ்தாரமாகப் பூஜை செய்கின்றாய். ஆனால் இங்கே அன்பும், பக்தியும் இல்லை. எனவே எனக்கு மகிழ்ச்சியே இல்லை. என்னை மீண்டும் கசாப்புக் கடைக்காரரிடமே கொண்டுச் செல். அப்பொழுது தான் நான் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்'' என்று கூறியது.
இறைவன் அன்புக்காக மட்டுமே ஏங்குகின்றார். அவர் வெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிறைந்த வழிபாட்டில் திருப்தி அடைவதில்லை. தூய அன்பும். பக்தியும் மட்டுமே அவரைத் திருப்தி செய்ய முடியும்.
சாதகரின் ஆன்மிகப் பசியை திருப்திப்படுத்துபவர் யாரோ அவரே குரு.
- சுவாமி ராமதாஸர் அருளிய கதைகள்