- · 0 friends
நடந்து கடந்த தடங்கள்!
ஒரு குருவும் அவரது சீடரும் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூர பயணம் என்பதால் இருவருமே சற்று களைப்படைந்திருந்தனர். வழியில் ஒரு பெரிய நதி குறுக்கிட்டது.
அந்த நதிக்கரையில் ஒரு இளம் பெண் தன் உடமைகள் நினையாமல் இருக்க எப்படி மறுபுறம் செல்வது என்று தெரியாமல் கவலையுடன் நின்று கொண்டிருந்தாள்.
அவளது முகத்தில் இருந்த பயத்தைக் கண்ட குரு, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு நதியைக் கடந்து மறுபுறம் பாதுகாப்பாக சேர்த்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
சீடன் தன் குருவின் இந்தச் செயலைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
துறவறத்தில் இருக்கும் ஒருவர் பெண்ணைத் தொடுவது தவறு என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் குருவோ எதையும் பெரிதுபடுத்தாமல் நடந்து சென்றார்.
இரண்டு மணி நேரம் கடந்த பின்பும் சீடனின் மனதில் இதே சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. அவனால் தன் கோபத்தையும் குழப்பத்தையும் அடக்க முடியாமல், இறுதியாக குருவிடம் கேட்டே விட்டான்:
"குருவே, நமது துறவற நெறிப்படி நாம் பெண்களைத் தொடுவதோ, நெருங்குவதோ கூடாதே! அப்படியிருக்க, நீங்கள் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்றது சரியா?"
இதைக் கேட்ட குரு மென்மையாகப் புன்னகைத்தார். அவரிடம் எந்தக் கோபமும் இல்லை. அவர் அமைதியாக சீடனைப் பார்த்துச் சொன்னார்:
"அன்புப் பிள்ளாய்... நான் அந்தப் பெண்ணை நதிக்கரையிலேயே இறக்கிவிட்டு, என் கடமையை முடித்துவிட்டு இரண்டு மணி நேரமாகிவிட்டது. ஆனால், நீயோ அவளை என் தோளிலிருந்து உன் மனத்திற்குள் இறக்கிவைக்கவே இல்லை. நதியை நான் கடக்கவில்லை, நீதான் உன் எண்ணங்களுக்குள் இன்னும் மாட்டிக் கொண்டிருக்கிறாய்." என்றார்.
நதியை நான் கடக்கவில்லை, நீதான் உன் எண்ணங்களுக்குள் இன்னும் மாட்டிக் கொண்டிருக்கிறாய்" என்ற குருவின் வார்த்தைகள் மிக ஆழமானவை.
கடந்த காலம் என்பது கடந்துபோன நதி போன்றது. அதில் கை கழுவிவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டுமே தவிர, அதையே நினைத்துத் தேங்கி நிற்கக் கூடாது.
நம்மைப் புண்படுத்திய விஷயங்களையோ அல்லது தேவையில்லாத குழப்பங்களையோ மனதுக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளாமல், "அப்போது முடிந்தது, அதோடு சரி" என்று அப்பப்போ தூக்கி எறிந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழுவதே உண்மையான மன அமைதியைக் தரும்!
கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களையோ அல்லது மற்றவர்களின் செயல்களையோ நாம் நமது மனசுக்குள் சுமந்து கொண்டிருப்பது நம்மை நாமே தண்டித்துக் கொள்வதற்குச் சமம்.
எதையும் உரிய நேரத்தில் கடந்து செல்வதும், மனதைச் லேசாக வைத்துக் கொள்வதுமே நிம்மதியான வாழ்வுக்கான வழி!