- · 0 friends
பகிர்தல்
ஒரு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள்.
ஒருவர் வசதியானவர்.
தினமும் வீட்டில் இருந்து கொண்டு வந்ததில் மீதமான உணவை பள்ளி வாசலில் இருக்கும் வயதான காவலாளிக்குக் கொடுப்பார்.
“சாப்பிடுங்க தாத்தா… கொஞ்சம் அதிகம் ஆயிட்டதுன்னு கொண்டு வந்தேன்…”
காவலாளியும் புன்னகையுடன் வாங்கி சாப்பிடுவார்.
ஆசிரியருக்கு மனதில் ஒரு திருப்தி —
“நான் தினமும் ஒருவருக்கு உதவி செய்கிறேன்” என்ற பெருமை.
மற்றொரு ஆசிரியர் சாதாரண சம்பளத்தில் வாழ்க்கை நடத்துபவர்.
அவர் வீட்டிலிருந்து கொண்டு வருவது நான்கு இட்லிகள் அல்லது கொஞ்சம் சாதம் மட்டுமே.
மதிய நேரத்தில் அந்த காவலாளர் பசியாக அமர்ந்திருப்பதை பார்ப்பார் .
அவர் டிபன் பாக்ஸை திறந்து,
“வாங்க தாத்தா… நாம இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்…” என்று அருகில் உட்கார வைத்து
இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவார்கள்.
அவர்கள் சிரித்துக்கொண்டே நிறைய பேசுவார்கள்.
அதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த முதல் ஆசிரியருக்கு ஏதோ மனதில் பட்டது.
தான் தினமும் கொடுத்தது “மீதமிருந்த உணவு” மட்டும்.
ஆனால் இந்த மனிதன் கொடுத்தது “தனக்கிருந்த உணவு”.
அடுத்த நாள் முதல் அவர் பழைய மாதிரி மீதமிருந்ததை மட்டும் கொடுக்கவில்லை.
மதிய நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொண்டு வந்து,
“தாத்தா… வாங்க சேர்ந்து சாப்பிடலாம்…” என்று அருகில் அமர ஆரம்பித்தார்.
அன்று தான் அவர் உணர்ந்தார்…
பிறருக்கு கொடுப்பது என்பது
நமக்கு தேவையில்லாததை தூக்கி கொடுப்பது அல்ல.
நமக்கு தேவையான ஒன்றிலிருந்து
ஒரு பங்கை அன்பாக பகிர்வது.
அன்பு வயிற்றை மட்டும் நிரப்பாது…
மனிதனின் மனதையும் நிரப்பும்.