·   ·  66 posts
  •  ·  0 friends

ஆண்டவன் அருள்

கண்ணப்புரி என்ற நாட்டை, சுந்தர வரதன் எனும் அரசன், ஆட்சி செய்து வந்தான்.

ஒருநாள் இரவு அரசனும், அமைச்சரும் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றி வந்தபோது, பிச்சைக்காரர் இருவரை பார்த்தனர்.

அவர்களில், 'இறைவன் அருள்... இறைவன் அருள்...' என, பிச்சையைக் கேட்டான், ஒருவன்; 'அரசர் அருள்... அரசர் அருள்...' என, கூவி பிச்சைக் கேட்டான், மற்றொருவன்.

அவர்கள் இருவரும், மறுநாள் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

'உங்களில் ஒருவன் ஆண்டவன் பெயரையும், மற்றொருவன் அரசர் பெயரையும் உச்சரித்து பிச்சை எடுத்தீர்கள். எதனால்?' எனக் கேட்டார், அரசர்.

இறைவனை நினைத்து யாசித்தவன், 'உலகமனைத்தும் ஆண்டவன் அருளால் காக்கப்படுகிறது. செல்வத்தை, உடல் நலத்தை நமக்களிக்கும் வல்லமை அவருடையது. அதனால் தான் அவர் நாமத்தைக் கூறினேன்...' என்றான்.

'கடவுள் கண்களுக்குப் புலப்படாதவர். அரசர் தான் கண்கண்ட தெய்வம். அவர் எவரையும் செல்வந்தராக்கும் ஆற்றல் உள்ளவர். அதனால், அவர் பெயரால் நான் பிச்சை எடுத்தேன்...' என்றான், இரண்டாமவன்.

அதன் பின் அவர்களை அனுப்பி வைத்து, அமைச்சரிடம், 'அரசர் அருள் சிறந்ததா, ஆண்டவன் அருள் சிறந்ததா என்பதை ஆராய்ந்து அறியலாம்...' என்றார்.

அரசர் பிறந்தநாளன்று, அரண்மனைக்கு வரும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுவதாக, நாடு முழுவதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசர் பிறந்தநாளன்று பலர், பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். வந்தவர்களில், மேற்கூறிய இரு யாசகர்களும் இருந்தனர்.

அரசர் அருளைப் பாராட்டிய யாசகனுக்கு, ஒரு பெரிய பூசணிக்காயைக் கொடுத்து, அது அவனுக்கு மாபெரும் செல்வத்தைத் தரும் எனக் கூறினர்.

சில நாட்களுக்கு பின், அரசரும், அமைச்சரும் நகர்வலம் வரும் போது, பூசணிக்காய் பெற்ற யாசகன், முன் போலவே பிச்சை எடுப்பதைக் கண்டனர்.

'என்னிடம் பரிசு பெற்ற பின்பும் பிச்சை எடுத்து வாழ்கிறாயா?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே, நான் அந்த பூசணிக்காயை ஒருவனுக்கு, இரண்டு வெள்ளி நாணயங்களுக்கு விற்றேன். எத்தனை நாட்கள் அந்த பணத்தில் வாழ முடியும்? அதனால், மீண்டும் பிச்சை எடுக்கிறேன்...' என்றான்.

'மடையனே! பூசணிக்காயில் தங்கத்தையும், முத்துக்களையும் வைத்திருந்தேன். அதை நீ அறுத்துப் பார்த்திருந்தால், செல்வந்தனாகி இருப்பாய்...' என, கடிந்து கொண்டார், அரசர்.

அரசரும், அமைச்சரும் அரண்மனைக்கு திரும்பி வரும் வழியில், ஒரு பல்லக்கைப் பார்த்தனர். அதில் கடவுள் பெயரால் யாசித்தவன் அமர்ந்திருந்தான்.

அவனிடம், 'நீ எப்படி செல்வந்தன் ஆனாய்?' எனக் கேட்டார், அரசர்.

'அரசே! இது ஆண்டவன் அருளால் கிட்டியது. ஒரு யாசகனிடமிருந்து பூசணிக்காயை வாங்கினேன். அதை அறுத்த போது பொற்காசுகள், முத்துக்களைப் பார்த்து வியப்படைந்தேன். அவற்றை நான் தக்க விலைக்கு விற்றேன்; செல்வந்தனாகி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு அரசன் அருள் இருந்தாலும், ஆண்டவன் அருள் இல்லையெனில், எந்த உதவியும் அவனை சென்றடையாது.

  • 730
  • More
Comments (0)
Login or Join to comment.