தங்ககாசு
ஒரு மன்னர் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார். நல்ல வெயில், உச்சி வேளை. அப்போது ஒரு இளைஞன் சாலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான்.
அரசர் அவனை அழைத்து, ஜூஸ் கொடுத்து உபசரித்தார். அதன்பின், "இந்த சித்திரை மாத உச்சி வெயிலில் எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறாய்? அப்படி என்ன வேலை?" எனக் கேட்டார்.
"நான் ஒரு மளிகைக் கடை வைத்திருக்கிறேன், மன்னா. அதில் உழைத்துச் சேமித்து ஒரு தங்கக் காசை வாங்கி, கோட்டையின் கிழக்குச் சுவரில் ஒரு செங்கல்லை அகற்றி அதனுள் ஒளித்து வைத்தேன். இன்று ஆண்டவன் புண்ணியத்தில் மதியமே கடையில் உள்ள பொருள்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதனால், ஒளித்து வைத்த காசை எடுத்து, சரக்கு வாங்கி, கடையை மீண்டும் திறந்து விற்றால், மாலையில் நல்ல இலாபம் வரும்."
"அடடா, என்ன மினிமலிசம்? என்ன சிக்கனம்!" என்ற அரசர், "கோட்டையின் கிழக்குச் சுவர் இன்னும் ஒரு கல் தொலைவுதான் இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாதே. இந்தா, நானே ஒரு தங்கக் காசைக் கொடுக்கிறேன். வைத்துக்கொள்."
"நன்றி, அரசே. ஆனால் நான் கோட்டை மதில்சுவருக்குப் போனால் இரண்டு காசுக்கு பொருள் வாங்கி விற்கலாம். இன்னும் இலாபம் வரும்."
"ஹா, ஹா... நல்ல விவரமான பையன். இந்தா, நூறு காசு."
"அரசே, நான் மீண்டும் கோட்டை.."
"போதும், நிறுத்து. இந்தா ஆயிரம் காசு, போதுமா? இனியாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"
"இல்லை, மன்னா. அதுவும் காசுதானே? நீங்கள் கோடி பொற்காசுகள் கொடுத்தாலும், கோட்டையின் கிழக்குச் சுவருக்குப் போய் அதையும் எடுத்துக்கொண்டுதான் போவேன்."
'அடடா, உழைத்துச் சம்பாதித்த காசுக்குத்தான் எத்தனை மதிப்பு! சரி, ஒன்று பண்ணலாம். என் பெண்ணை உனக்கு மணம் முடித்து வைத்து, பாதி நாட்டைக் கொடுக்கிறேன். அப்பவாவது கிழக்குச் சுவர் பக்கம் போகாமல் இருப்பாயா?"
"சரி, அரசே."
அதன்படியே திருமணம் நடந்தது. மன்னர் அதன்பின் "மருமகனே, உனக்குப் பாதி நாட்டைக் கொடுப்பதாகச் சொன்னேன். நாட்டின் எந்தப் பகுதி வேண்டும்?" எனக் கேட்க,
யோசித்த இளைஞன், "கிழக்குப் பகுதி நாட்டைக் கொடுங்கள், மன்னா" என்றானாம்.
எத்தனை செல்வம் சேர்ந்தாலும், மினிமலிஸ்டுகள் எப்போதும் ஒரு பைசாவைக் கூட வீணாக்க மாட்டார்கள் என மன்னர் அதன்பின் புரிந்துகொண்டார்.