·   ·  174 posts
  •  ·  0 friends

தன்னம்பிக்கை

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்...

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு..,

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றார் அவர்.

"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார் அவர்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முக மலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இது 500 கோடிக்கு செக், நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டு சென்றார் அவர்.

செக்கை பெற்றதும் மனதில் புது நம்பிக்கை பிறந்த அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆயினும் அந்த பணத்தை தொட மாட்டேன்.

இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.

அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்.

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்.

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம். அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக் தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச முடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

இந்த நம்பிக்கையை கற்றுத் தந்த அந்த மன நோயாளி குடும்பத்தையே வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார்.

தன்னம்பிக்கை எதையும் வீழ்த்தும் அபார சக்தி மிக்கது.

  • 434
  • More
Comments (0)
Login or Join to comment.