பால் வேண்டாத பூனை! பழம் தொடாத குரங்கு!
தெனாலி என்ற ஊரில் ராமன் என்பவன் வசித்து வந்தான். ராமன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். பிறரிடம் உள்ள தவறுகளைக்கூட நைச்சியமாகச் சொல்லக்கூடியவன். அவன் கிருஷ்ணதேவராயர் சபையில் விதூஷகனாக இருந்தான்.
ஒரு நாள் சபையில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. "பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ? அதுபோல் பணத்தை விரும்பாத மனிதரும் கிடையாது
பணத்தைக் கொடுத்துக் காரியத்தை முடி" என்றார் ஒருவர்.
தெனாலிராமன் குறுக்கிட்டு, "உலகில் கிடையாது என்பதே கிடையாது. தேடினால் பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்" என்று சொன்னான்.
அரசர் எரிச்சலுடன் "ராமா! மறுத்துப்பேச வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லாதே!" என்றார்.
"இம்மூன்றையும் நான் நிரூபித்தால் எனக்கென்ன பரிசு?" என்று சவாலாகக் கேட்டான் ராமன்.
"ஆயிரம் பொன் தருகிறேன். முடியவில்லை என்றால் பதவியிலிருந்தே நீக்கப்படுவாய்" என எச்சரித்தார் ராயர்.
ராமன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.
ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்து அதற்கு சாதம் போட்டான். பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி அதன் முன்வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை வாயைச் சுட்டுக்கொண்டு ஓடியது. தினமும் இப்படியே செய்துவந்ததால் பூனை வெள்ளையாக எதைப் பார்த்தாலும் மிரண்டு ஓடியது.
அடுத்து குரங்காட்டியிடமிருந்து ஒரு குரங்குக் குட்டியை வாங்கி அது தன்னிடம் நன்கு பழகியபின் ஒரு நல்ல பெரிய வாழைப்பழத்துக்குள் ஒரு நீளமான இஞ்சியை வைத்து அதற்குக் கொடுத்தான். அதுவும் ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்துக்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது. காறி உமிழ்ந்தது. தினமும் ராமன் அதற்குப் பச்சைவாழை, செவ்வாழை, மொந்தன், ரஸ்தாளி, மலைப்பழம் என்று விதவிதமாகக் இஞ்சிச் சொருகிக் கொடுத்ததால் அது வாழைப்பழத்தைக் கண்டாலே காததூரம் ஓடியது.
அடுத்து பரம ஏழையான ஒரு மனிதனை சினேகம் பிடித்துக் கொண்டான் ராமன்.
"அவனிடம் நீ இருபத்து நான்கு மணி நேரமும் என்னுடனேயே இருக்கவேண்டும். ஒரு வேளை சோற்றைக் கண்ணால் பார்க்காமலிருந்தால் பத்து பொன். நாள் பூராவும் பட்டினி கிடந்தால் முப்பது பொன். பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால் நான் பொன் தரமாட்டேன். அது மட்டுமல்ல நீ எனக்கு முப்பது பொன் தரவேண்டும் அல்லது அதற்கு ஈடாக உழைக்க வேண்டும்.
இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லை என்றால் சொல்லிவிட்டு அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக்கொண்டு செல்லலாம். திருட்டுத்தனமாக ஒரு பருக்கை சாப்பிட்டாலும் பரிசு கிடையாது. நீ உயிரோடிருக்க நான் குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பிறகு நான் உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன்.
அரசர் பணம் தருவார். அதைப் பெற்றுக் கொண்டால் நான் தந்ததை மூன்று மடங்காகத் திருப்பித் தரவேண்டும். மறுத்தால் நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு நூறு பொற்காசுகள் சேர்த்துத் தருவேன்.என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.
ஏழை மனிதன் யோசித்தான்.
'வருமானமில்லாமல் தினமும் பட்டினி கிடக்கிறோம். இங்கே ஒரு நாளைக்கு முப்பது பொன். பத்து நாள் பட்டினி கிடந்தால் முந்நூறு பொன்னோடு கூடுதலாகவும் நூறு பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம். எதற்காகவோ அரசரிடம் கூட்டிப் போகிறான். இவனில்லாமல் அரசரைப் போய் பார்த்தால் என்ன கிடைக்கும்? பத்தோ, இருபதோ, நூறோ பொன் கிடைக்கலாம்! கிடைக்காமலும் போகலாம்! அதனால் ராமன் சொன்னபடியே கேட்போம்' என முடிவெடுத்து ராமனிடம் சம்மதம் தெரிவித்தான்.
ராமன் இரவு தூங்கும்போதுகூட இருவரையும் சங்கிலியால் பிணைத்திருந்தான். பத்து நாட்கள் சென்றன. என்னதான் பசியாதிருக்கக் குளிகை சாப்பிட்டாலும் நா ருசியாகச் சாப்பிட மனம் ஆலாய் பறந்தது. அவன் தன் விரதத்தை முடித்துக் கொள்வதாகச் சொல்ல, ராமன் அவனோடு அரண்மனைக்குப் புறப்பட்டான்.
மன்னரை வணங்கி "இவரே பணம் வேண்டாத மனிதர்" என்றான் ராமன். ஒரு தட்டு நிறைய பொற் காசுகளும் ஆபரணங்களும் கொண்டு வரச்சொல்லி மன்னர் அவன் எதிரே வைத்தார்.
"தேவையானதை அள்ளிக்கொள்" என்றார். "இல்லை. இதில் ஏதோ சூதிருக்கிறது" என்று நினைத்த ஏழை, “அரசே! இதில் ஒரு பொற்காசுகூட எனக்கு வேண்டாம்" என மறுத்துவிட்டான்.
"என்னப்பா, அதிசயமாயிருக்கிறது. எல்லோரும் பணத்துக்கு ஆலாய் பறக்க, நீ ஏன் பெற்றுக்கொள்ள மறுக்கிறாய்?" என்று வியப்போடு வினவினார் வேந்தர்.
"பணத்தைத் தின்னமுடியுமா? பசி வந்தால் சோறுதான் வேண்டும். பணத்தைப் பார்த்தால் அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? என்னைச் சீக்கிரம் விடுங்கள். நான் போகவேண்டும்" என்று அவசரப்பட்டு ஓடினான்!
"தெனாலிராமா! ஏன் இவன் இப்படிப் பேசுகிறான்?'' என்று அரசர் கேட்க, "அதை அப்புறம் சொல்கிறேன். நீங்கள் பால் குடிக்காத பூனையையும் பழம் தின்னாத குரங்கையும் பார்க்கவேண்டாமா?" என்று இரண்டையும் காண்பித்தான்.
அரசரும் பார்த்தனர். அவையோரும் பிரமிப்போடு
ஒரு அகலமான பாத்திரத்தில் சுவையான பசுவின் பாலை எடுத்துவரப் பணித்தார் வேந்தர். பால் வந்தது.
தெனாலிராமனின் பூனைப் பாலைப் பார்த்தது தான் தாமதம்! நாலுகால் பாய்ச்சலில் எகிறி ஓடியது. பால் மட்டுமா? வெண்ணெய், தயிர் எதையுமே முகரவும் மறுத்தது.
குரங்கை ஒருவர் பிரியமாகத் தடவிக்கொடுத்து மலைவாழைப்பழத்தை உரித்துக் கொடுக்க, அவரை அது பிறாண்டிவிட்டு ஓடியது.
ஆயிரம் பொன்னை வாங்கிக்கொண்டு காரணத்தைச் சொன்னான் ராமன்
அரசே ! எதையும் எவருக்கும் வேண்டாததாக ஆக்கமுடியும்! காலமும் தேவையும்தான் ஆசையை உண்டாக்குகிறது. பசித்த மனிதனுக்குப் பணம் மட்டுமே முக்கியமாகாது. அம்மணமாக நிற்கும் மனிதன் ஆடையைத்தான் விரும்புவான். சும்மா பழமொழி சொன்னால் ஆயிற்றா?" என்றான்.
அரசர் அசந்து போனார்!