கார்த்திகை மாதம் கண் திறக்கும் நரசிம்மர்
சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.
ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்தியா - தமிழ்நாட்டில் - சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.