எறும்புக்கு சர்க்கரை
ஆன்மிகத்துறையில் ஈடுபடுபவர்கள் கூட சில சக்திகளும் சித்திகளும் வந்தவுடன் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்கு மேல் அவர்கள் வளர்வதில்லை. இதே கருத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அழகாக விளக்கினார். அவர் ஊரில் உள்ள கோயிலில் இறைவனுக்கு இனிப்பான பிரசாதங்களை படைப்பார்கள். அதைச் சுவைக்க எறும்புக் கூட்டம் வந்துவிடும். அவற்றை விரட்ட இப்போது இருப்பது போல் ரசாயனப் பொடிகள் எல்லாம் இல்லை.
""எறும்புகளை எப்படி வரவிடாமல் தடுப்பது?'' என்று ராமகிருஷ்ணரிடம் கோயில் நிர்வாகத்தினர் கேட்டார்கள்.
""கோவில் வாசலில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விடுங்கள். அதைத் தாண்டி அவைகள் வராது.''
கொஞ்சமும் வன்முறையில்லாத அற்புதமான வழி. எறும்பிற்கு வேண்டியது ஒரு இனிப்புப் பொருள். அது கோவில் வாசலிலேயே சாதாரணச் சர்க்கரையில் கிடைக்கும் போது, எதற்காக உள்ளே வரவேண்டும்?
ராமகிருஷ்ணரின் யோசனை நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அன்று அவர் தன் சீடர்களுக்குச் செய்த உபதேசம்.
""அந்த எறும்புகளின் நிலையில்தான் இன்று பலர் இருக்கிறார்கள். இறையருளைத் தேடி சன்னிதானத்திற்கு வருகிறார்கள். இறைவன் அவர்களுக்கு செல்வம், புகழ் போன்றவற்றைக் கொடுக்கிறான். இவை எல்லாம் கோயில் வாசலில் கொட்டிக்கிடக்கும் சாதாரணச் சர்க்கரை. உண்மையான ஆன்மிக இனிப்பு கோயில் கருவறையில் இருக்கிறது. ஆனால், சாதாரணச் சர்க்கரை போதும் என்று
அவர்கள் வாசலோடு திரும்பிப் போய்விடுகிறார்கள்.''
பெரிய லட்சியத்துடன் வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், நடுவிலேயே தங்கள் கனவுகளையும் லட்சியத்தையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு, சுக வாழ்க்கையில் முடங்கிப் போகிறார்கள்.