·   ·  516 posts
  •  ·  0 friends

தன்னம்பிக்கை அவசியம்

பாலைவனம் என்றால் மணலாகக் கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. செடி, கொடிகள் எதுவும் வளரமுடியாத பனிப்பிரதேசங்களும் பாலைவனம்தான். அப்படி ஒரு பாலைவனத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பாவும் மகனும் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் நடக்க நடக்க பனிப்பாறைகள் தான் இருந்தனவே தவிர வேறு எதுவுமில்லை. பிடித்து சாப்பிட மீன் இருக்கும் குளம், குட்டை என்று எதுவுமில்லை. எல்லாமே உறைந்திருந்தன. பசியால் உயிர் போய்விடுமோ என்ற பயம் மகனுக்கு ஏற்பட்டது. அப்பாவைப் பார்த்தான். ‘‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து விடாதே’’ என்றார் அப்பா.

மகனுக்கு நம்பிக்கையே இல்லை. மதியம் வரை ஒரு மீன்குட்டைக் கூட பார்க்க முடியவில்லை. முடிவில் ஒரு குளத்தைக் கண்டார்கள். அவர்களுக்குத் தேவையான மீன்களை ஓரளவுக்குப் பிடித்து கூடையில் போட்டுக் கொண்டார்கள். அதிலிருந்து தள்ளி ஒரு நிலப்பரப்பில் காய்ந்த மரம் ஒன்றைப் பார்த்தார்கள். அதன் அடியில் அமர்ந்தார்கள்.

‘‘அப்பா, மீனை எப்படி சாப்பிடுவது? பச்சையாகவா…’’

‘‘பச்சையாக எப்படி சாப்பிட முடியும்?’’

‘‘இங்கே விறகு இருக்கிறது. ஆனால் எரிக்க நெருப்பு வேண்டுமே?’’

‘‘ஏதாவது வழி இருக்கும். தளராதே’’..

‘‘என்னப்பா இது… எப்ப பாத்தாலும் ‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து விடாதே’ன்னு சொல்லிட்டே இருக்கீங்க..’’

‘‘அது ஒன்றுதான் வாழ்வதற்கான வாக்கியம்’’ என்று சொன்ன அப்பா, அருகில் இருந்த பனிக்கட்டியில் ஒன்றை எடுத்து தன்னிடம் இருந்த கத்தியால் அதை செதுக்கினார். அதை ஒரு குவி லென்ஸ் போல ஆக்கிவிட்டார். காய்ந்த சுள்ளிகளில் மிக மிக மெல்லிய சுள்ளிகளை கொஞ்சமாகக் குவித்துக் கொண்டார்.

பனிக்கட்டியால் செய்த குவி லென்ஸை வைத்து சூரிய ஒளியை மெல்லிய சுள்ளிகள் மேல் குவித்தார். சூரிய ஒளி அதன்வழியே சுள்ளியின் மேல் குவிந்தது. வெப்பம் ஏறத் தொடங்கியது. பொறுமையான காத்திருத்தலுக்குப் பிறகு சுள்ளி தீப்பிடிக்க ஆரம்பித்தது.

மகன் இதைப் பார்த்து துள்ளிக் குதித்தான். இன்னும் பெரிய விறகைப் போட்டு நெருப்பு மூட்டினான். அதில் மீனை அப்பாவும் மகனும் வேகவைத்து வயிறார சாப்பிட்டார்கள்.

அப்பாவின் அறிவுத்திறனை மகன் வியந்தான். எப்படிப்பட்ட சூழலிலும் பயப்படாமல் இருந்தால் மட்டுமே அதை சமாளிக்கும் அறிவும் வரும் என்பதைப் புரிந்து கொண்டான்.

இப்போது அப்பா விளையாட்டாகக் கேட்டார். ‘‘மகனே, எப்படி இந்த பனிப் பாலைவனத்தைக் கடக்கப் போகிறோம்?’’

‘‘கவலைப்படாதீர்கள் அப்பா. மனம் தளராதீர்கள். ஏதாவது வழி இருக்கும்’’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான் மகன்.

  • 196
  • More
Comments (0)
Login or Join to comment.