- · 0 friends
ஒரு விபத்து ஒரு ஆசிரியையை கண்டுபிடிப்பாளராக மாற்றிய
ஆந்திரா மடகாசிராவை சேர்ந்த அரசுப்பள்ளி இயற்பியல் ஆசிரியை தான் ஏ.விஜய பார்கவி. இவரது கணவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது பெரிய விபத்து நடந்தது. அப்போது ஹெல்மெட் அணியாததால் பலத்த காயம் ஏற்பட்டது. அதே சமயம் இவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியர் பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவமும் இவர் மனதை ரொம்பவே பாதிச்சிருச்சு.
"இதை தடுக்க ஏதாவது செய்ய முடியுமா?" என்று யோசித்தவர், இரண்டு வருட உழைப்பில் ஒரு ஸ்மார்ட் ஹெல்மெட்டை உருவாக்கியிருக்கிறார்.
இந்த ஹெல்மெட்டின் சிறப்பு என்ன தெரியுமா?
ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஸ்டார்ட் பண்ணவே முடியாது.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்களா என்று கண்டுபிடித்து, குடித்திருந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.
ஒருவேளை விபத்து நடந்தால், உடனே GPS மூலம் இருக்கும் இடம், நேரத்துடன் குடும்பத்தினருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் போய்விடும்.
இவ்வளவு வசதி இருந்தும் இதன் விலை வெறும் ரூ.2000 முதல் 2500 வரை தான்.
இதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஊர் முழுக்க குப்பை கொட்டப்படுவதை பார்த்து ஒரு ஸ்மார்ட் குப்பைத் தொட்டியையும் கண்டுபிடித்துள்ளார். குப்பை போடும்போது ஆதார் மூலம் பதிவாகும், குப்பை நனையக் கூடியதா, காய்ந்ததா என்று தானாக பிரிக்கும், தொட்டி நிறைந்தாலோ அல்லது குப்பை அழுக ஆரம்பித்தாலோ உடனே நகராட்சிக்கு தகவல் கொடுத்துவிடும்.
இவரது இந்த அசத்தலான கண்டுபிடிப்புகளுக்காக சர்வதேச மகளிர் தினத்தன்றும், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அமைப்பும் விருது கொடுத்து கௌரவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வருடம் ஆசிரியர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும் வென்றிருக்கிறார்.
"பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சுற்றி நடப்பதை கவனித்து அதில் உள்ள பிரச்சனைக்கு அறிவியல் மூலம் தீர்வு காண மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்" என்பது தான் இவரது ஆசை.
ஒரு ஆசிரியை நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.