- · 0 friends
வஞ்சக உள்ளம்
ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள்.
ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, "கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ பின்கட்டில் வேலையாக இருந்தார்கள். இந்தப் பிராமணர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை அவர் சொல்லியும் யாரும் வரவில்லை. அங்கே ஒரு வெண்கலக் கிண்டி பளபளவென்று மின்னியது. நன்றாகத் தேய்த்திருந்தார்கள். யாராவது வருகிறார்களா என்று எதிர் நோக்கிக் காத்துநின்ற அந்த ஏழைப் பிராமணர் கண்ணிலே அந்தக் கிண்டி பட்டது; கருத்திலும் பட்டது. தாம் வந்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையென்பதை அறிந்து அவர் திரும்பிச் செல்ல எண்ணினார். முன்னே இருந்த கிண்டி அவர் ஆசையைத் தூண்டியது. ‘இங்கே ஒருவரும் இல்லையே! இதை யார் பார்க்கப் போகிறார்கள்?' என்று அதை எடுத்துப் பைக்குள் போட்டுக்கொண்டு போய் விட்டார்.
மறுநாள் வழக்கம் போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிய அவர் இந்த வீட்டுக்கும் வந்தார். வரும் போதே அவர் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வீட்டுக்குள் நுழைந்தார். முதல் நாள் அங்கிருந்த கிண்டியைத் திருடிய எண்ணம் முன் நின்றது. வழக்கம் போல, “கிருஷ்ணாய நமஹ" என்று சொல்லவேண்டியவர் தம்முடைய மனத்தில் கிண்டி உட்கார்ந்து கொண்டிருந்தமையால், “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டுத் திருட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
இப்படி ஒரு கதையும், "கிண்டியாய நமஹ என்று வந்து நின்றான்" என்ற பழமொழியும் வழங்கி, வருகின்றன. நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.