- · 0 friends
மனிதநேயம் (இது கதையல்ல.. உண்மைச்சம்பவம்)
ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு கோடிக்கணக்கான பணம் தேவையில்லை. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு வேளை உணவு, சொந்த ஊருக்குச் செல்ல ஒரு விமான டிக்கெட் இருந்தாலே போதும் என்பதை நினைவூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அடிக்கடி உணவு கொண்டு வரும் டெலிவரி ஊழியர், அன்றும் உணவை வழங்கிவிட்டு தயக்கத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அவரை வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் கொடுத்த அங்கித், பேசிக்கொண்டிருக்கும்போது அந்த இளைஞரின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்து என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.
அப்போது, “எதுவும் சரியாக இல்லை” என்று கூறிய அந்த டெலிவரி ஊழியர், தனது தாய் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சொந்த ஊருக்குச் செல்ல 30 மணி நேரம் ஆகும் ரயில் பயணம் மட்டுமே இருப்பதால், தாயை சரியான நேரத்தில் பார்க்க முடியுமோ என்ற கவலையில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் அன்று முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அறிந்த அங்கித், தனக்காக வந்திருந்த உணவையே அவருக்குச் சாப்பிடக் கொடுத்தார். அதன்பிறகு, 4,000 ரூபாய் செலவில் அவருக்காக விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொடுத்தார்.
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால், விமான நிலைய நடைமுறைகள் குறித்து டெலிவரி ஊழியர் பதற்றமடைந்தார். அதற்கு, விமான நிலையத்தில் இருக்கும் தனது நண்பர் அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கூறி அங்கித் அவருக்கு தைரியம் அளித்தார்.
சில மணி நேரங்களிலேயே சொந்த ஊருக்குச் சென்ற அந்த டெலிவரி ஊழியர், தனது தாயை சந்தித்தார். பின்னர் அங்கித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததுடன், தாயின் உடல்நிலையும் தற்போது முன்னேறி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
விமான டிக்கெட்டிற்காக செலவிட்ட 4,000 ரூபாயை பின்னர் டெலிவரி ஊழியர் திருப்பி அனுப்பியிருந்தாலும், அந்தப் பணத்தை தாயின் சிகிச்சைக்காகவே பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி, அங்கித் மீண்டும் அதே தொகையை அவரிடமே அனுப்பி வைத்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கித்தின் மனிதநேய செயலை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர். “மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது”, “கஷ்டமான நேரத்தில் செய்யப்படும் சிறிய உதவியும் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.